For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாகரத்திற்கு வித்திடும் 5 விவகாரமான விஷயங்கள்!!

By Karthikeyan Manickam
|

'இரு மனமும் இணைந்தால் திருமணம்' என்று சொல்வார்கள். அந்த இரு மனங்களும் விகாரமானால் அது விவாகரத்தில் தான் கொண்டு போய் விடும். விவாகரத்தான ஒரு சிலருக்கு அதற்குப் பின் வரும் வாழ்க்கை நன்றாக அமைந்தாலும், ஏராளமானோருக்கு அது பலவிதமான மோசமான விளைவுகளைத் தான் ஏற்படுத்துகிறது.

தம்பதியருக்குள் ஏற்படும் சில சாதாரண ஊடல்கள் கூட பல சமயங்களில் விவாகரத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. மேலும், குடும்பத்திலுள்ள மற்றவர்களின் தலையீடு, அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்கள், வேலை தொடர்பான பிரச்சனைகள், குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள்... இப்படி எண்ணற்ற காரணங்கள் விவாகரத்துக்குக் காரணமாக உள்ளன.

Bitter Things That Lead To Divorce

எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்களில் சண்டை போட்டுக் கொள்ளும் பல தம்பதிகள், விவாகரத்து கேட்பதில் மட்டும் அப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். அப்படியே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனாலும், அவ்வளவு எளிதாக அது கிடைத்து விடுவதில்லை. ஆயிரத்தெட்டு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், ஏற்கனவே நொந்து போய் இருப்பவர்கள், வாழ்க்கையில் மேலும் சோர்ந்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட விவாகரத்துக்கு அடிப்படையான சில கசப்பான விஷயங்களைக் கொஞ்சம் அக்கறையோடும், தீவிரமாகவும் அலசி ஆராய்ந்தால், வாழ்க்கையில் அந்த வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் செய்து விடலாம். இதோ அப்படிப்பட்ட சில கசப்பான விஷயங்கள்...

கள்ளத் தொடர்பு

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு, திருமணத்திற்குப் பிந்தைய இந்தக் கள்ளக்காதல் தான் முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. தம்பதிகள் இப்படி ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதால் அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களையும், துயரங்களையும் காண சகிக்காது. இப்படி ஒரு விஷயம் ஒருவருடைய எண்ணத்தில் கூட வரக் கூடாது.

வெளியே செல்லும் குடும்பப் பிரச்சனைகள்

ஒரு கணவன்-மனைவிக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் சரி, அதை அவர்களுக்குள்ளாகத் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இருவர் மட்டுமே நான்கு சுவர்களுக்குள் சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூன்றாவது நபரின் காதுக்குச் சென்றால், அந்தப் பிரச்சனை மேலும் வளரத் தான் செய்யும்.

நேரம் ஒதுக்காமல் இருப்பது

இன்றைய காலக்கட்டத்தில் கணவன்-மனைவி தங்களுக்குள் பேசிக் கொள்வது கொஞ்சம் தான். குறிப்பாக, வேலைப்பளு காரணமாக, பேசுவதற்கான நேரத்தை ஒதுக்குவதற்குக் கூட அவர்களால் முடியாமல் போகிறது.

முக்கியத்துவம் குறைவு

கணவன்-மனைவிக்குள் ஒருவருடைய கருத்திற்கு இன்னொருவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். ஈகோ, போட்டி காரணமாக இந்த முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் போனால், வாழ்க்கை போர்க்களம் தான்!

மோசமான தகவல் தொடர்பு

எந்த சின்னப் பிரச்சனையானாலும் கணவன்-மனைவி இருவரும் மனம் திறந்து, தெளிவாகப் பேசிவிட்டால் அந்தப் பிரச்சனை உடனடியாகச் சரியாகும். 'இவ இதுக்காகத் தான் சொல்றாளோ?' என்று கணவனும், 'இவன் இத மனசுல வச்சுட்டுத் தான் பேசுறானோ?' என்று மனைவியும் தங்கள் மனத்திற்குள்ளாகவே பிரச்சனைகளைப் போட்டுப் புதைத்துக் கொண்டால், அவற்றை எப்படிச் சமாளிக்க முடியும்?

English summary

Bitter Things That Lead To Divorce

Do you know why a marriage fails? Here are some of the things that lead to divorce. Pay attention to this marriage advice.
Story first published: Saturday, October 25, 2014, 14:04 [IST]
Desktop Bottom Promotion