For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘எனக்கு நீ மட்டும் போதும் மாமா’ My story #93

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மீண்டும் தங்கள் ஊருக்குச் செல்ல முடிவெடுக்கும் போது நடந்தவை

|

மாமாவிற்க்கான என்னுடைய பரிசாய் எங்களது காதல் வாழ்க்கையின் அழகிய படைப்பாய் மகள் வந்திருக்கிறாள். 'ரோசாப்பூ மாதிரி இருக்காடி! என் புள்ள' என்று வெள்ளைத்துணியில் சுற்றிய அந்த உயிர்ச்செண்டை அள்ளி முகர்ந்து பூரிப்படைகிறான் மாமா. அந்தரத்தில் இருக்கும் அந்த செண்டு நெளிந்து பூனைக்குட்டியின் மெல்லிய ஓசையை கசியவிட்டது.
முதல் குரல். எங்களின் அதிகாரக்குரல்.

என் பூச்செண்டு இப்போது பிரிட்ஜிலிருந்து எடுத்துவரப்பட்ட ஆப்பிள் பழம் போல மிணுங்குகிறாள். அவள் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டேன். இருக்க மூடிய கண்கள், கைகளில் அடைத்து வைத்திருக்கும் அந்த பரம ரகசியம், என்னிலிருந்து பிரித்து எடுத்ததற்கான அடையாளமாய் தொப்புளில் மாட்டியிருந்த வெள்ளை நிற கிளிப் என ஆச்சரியமாய் இருந்தாள்.

Romantic love story about a couple

நேற்றிலிருந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் கொஞ்சம் கூட சலிக்கவேயில்லை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சேதி சொல்கிறாள். மவுனமாய் பேசுகிறாள். நிறைவைத் தருகிறாள்.தவிப்பை உணரவைக்கிறாள்.என்னைத் தேடுகிறாள். என்னை உயிர்ப்பிக்கிறாள்.ரசிக்க வைக்கிறாள் இன்னும்....இன்னும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவிர்ப்பு :

தவிர்ப்பு :

மெல்ல அவளது கையை பிரித்து என் ஆட்காட்டி விரலை நுழைத்தேன்.அந்த விரலை கட்டியணைத்து அரவணைத்துக்கொண்டது அவளது பிஞ்சு கை.

மாமா.... சோபி போன் பண்ணா.. என்று ஆரம்பிக்கும் போதே, மூஞ்சியை திருப்பிக் கொண்டான். புள்ளைக்கு ட்ராப்ஸ் போட்டியா? இந்த மாசம் தடுப்பூசி போடணுமா? நீ எப்போ ஆபிஸ் ஜாயின் பண்ற? என்று நான் சொல்ல வருவதை தவிர்த்துக்கொண்டேயிருந்தான்.
எப்படியாவது சம்மதித்து விடு :

எப்படியாவது சம்மதித்து விடு :

சொல்ல வருவதை தெரிந்து கொண்டு விட்டானோ?தெரிந்தும் ஏன் இப்படி? மாமா நினைத்தால் அவனாகவே கேட்கலாமே.... போன் வரும் போது காலையில் அவன் இருந்தானே மாலை வந்ததும் அவனாகவே கேட்டிருக்கலாம்.இப்போது நான் சொல்லும் போதாவது கேட்கலாம்

ம்ம்ஹூம்....கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்தேன் என் பூச்செண்டை மடியில் உட்கார வைத்து விதவிதமாய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான்.

கடைசி முயற்சி. என்று மனதில் நினைத்துக் கொண்டே மாமா எப்படியாவது இதுக்கு ஒகே சொல்லிடேன் என்று வேண்டிக் கொண்டே கிச்சன் லைட் ஆஃப் செய்துவிட்டு கீழே உட்கார்ந்தேன்.

சிதறிய உரையாடல்கள் :

சிதறிய உரையாடல்கள் :

என்னைப் பார்த்ததும் என்னிடம் தாவிக்கொண்டாள். குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு பேப்பரை புரட்ட ஆரம்பித்தான்.

மாமா.... சோபிக்கு நிச்சயதார்த்தமாம். பையன் ஐ.டி.வேலை பார்க்குறானாம். அப்பத்தா என்னைய கேட்டுச்சாம். கிணத்துல தண்ணி சுத்தமா போய்டுச்சாம். மேல் போர்சன் கட்டி முடிச்சுட்டாங்களாம். ஊர் பஸ்ஸ்டாண்டு இப்போ மாத்திட்டாங்களாம் உமா டீ ஸ்டால் எதிர்க்க தான் பஸ் ஏறணுமாம்,

இறங்கும் போது உச்சிப்பிள்ளையார் கோவில் கிட்ட இறக்கிவிடுவாங்களாம். இறங்கும் போதும் கொஞ்சம் தொலவு தான்...... காலையில் எங்களுக்குள் நடந்த உரையாடல்கள் சிதறி சிதறி வந்து விழுந்தன. வார்த்தைகள் வந்து விழ விழ மனம் சற்று அமைதியானது.

மீண்டும் கேள்வி :

மீண்டும் கேள்வி :

இதுவரையில் அடைத்திருந்தது எதோ ஒன்று விலகிவிட்டது போலத் தோன்றியது.

பேப்பரை மடித்து வைத்துவிட்டு என்னருகில் கிழே உட்கார்ந்தான் மாமா

என்ன இப்போ?

சொல்ல தயக்கமாய் இருந்தது. அதை விட வெட்கமாய் இருந்தது. கீழே குனிந்து கொண்டே ஒண்ணுமில்ல சோபியும் நானும் போன் பேசினோம் அதத்தான்... என்று முடிக்கும் முன்பு எப்படியாவது நீயாக புரிந்து கொள்ளட என் மடசாம்பிராணி என்ற வேண்டுதல் கண்ணீராய் வெளிவந்துவிட்டது.

இப்போது எனக்கு நேரெதிரே வந்துவிட்டான். கைகளை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டு மீண்டும் கேட்கிறான்.

என்ன?

கைகளுக்கு முத்தம் :

கைகளுக்கு முத்தம் :

ஒண்ணுமில்ல மாமா.... சன்னமாய் வார்த்தைகளை உள்ளிழுக்கிறேன்.

அவனே தொடர்ந்தான், சோபிக்கு நிச்சயதார்த்தம். அங்க போகணும்,ஊரப்பாக்கணும்,அப்பத்தாவ பாக்கணும்,முருகன் கோவிலுக்கு போகணும், புள்ளைய காட்டணும், அம்மா கிட்ட மன்னிப்பு கேக்கணும், கிணத்தடில போய் உக்காரணும்,மேல ஓட்டு வீடு இடிச்சுட்டு புதுசா கட்டியிருக்குற வீட பாக்கணும். அவ்ளோதானா இல்ல இன்னும் எதாவது இருக்கா என்று கேட்டுக் கொண்டே என் கைகளுக்கு முத்தமிட்டான்.

சந்தோஷமா போய்ட்டு வா :

சந்தோஷமா போய்ட்டு வா :

இவ்வளவு நேரம் என்னை தவிக்கவிட்ட கோபத்தில் லேசாக முறைத்துக்கொண்டே ‘போதும்' என்றேன்.

சந்தோசமா போய்ட்டு வா. என்று நெருக்கி வந்து நெற்றியில் முத்தமிட்டான்.

க்ஹீன்.....ஹியீன் என்று சத்தம் அப்போது தான் கவனித்தோம் எங்கள் இருவருக்குமிடையில் ஒரு ரோசாப்பூ பூச்செண்டு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

காதலிக்கும் போது... இப்போதும் காதலித்து கொண்டு தான் இருக்கிறோம்!

மாமாகாவியம் :

மாமாகாவியம் :

சரி திருமணமாவதற்கு முன்பு என் பெயர் ராட்சசி. சிரிக்க வைக்க -அழகி,கோபமூட்ட - பயந்தாங்கோலி, எரிச்சலூட்ட - செம்மயா....வெட்கத்திற்கு - மாமாக்கு.... என்று இழுத்தாலே போதும். "

எங்கே ஆரம்பித்து எப்படி வளர்ந்தது எல்லாம் தெரியாது. பின்நோக்கி செல்லவும், ஆராயவும் விரும்பவில்லை.

பார்த்தால் பிடிக்கும். உயிரோடு இருக்கும் வரை உடனிருக்க சொல்லும், சண்டையிட்டால் தவிக்கும்,பொய் சொன்னால் அழுகை வரும், உலகையே எதிர்க்கும்,சிரிப்பில் கலந்திருக்கும்,மகிழ்வில் ஒளிந்திருக்கும்,கண்ணீரில் கரைந்திருக்கும் இதற்க்கெல்லாம் நீங்கள் காதல் என்று பெயரிட்டால் நான் "மாமாகாவியம்" என்று பெயரிடுவேன்.

திருமணத்தில் முடிந்த உரையாடல் :

திருமணத்தில் முடிந்த உரையாடல் :

அத்தனை இஷ்டம் எனக்கு. திருமணத்திற்கு நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எதோ ஒரு உரையாடல் சண்டையாய் உருமாறிக் கொண்டிருந்தது.

என்னதாண்டி வேணும் உனக்கு?

நீ தான் வேணும்.

அடுத்த வார்த்தை வரவில்லை. தலையில் அடித்துக் கொண்டு லூசு என்று திட்டிக் கொண்டான். அடுத்த இரண்டாவது நாளின் முடிவில் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன்.மூன்றாவது நாள் காலை எனக்கும் மாமாவுக்கும் திருமணம்.

 காதல் வாழ்க்கை :

காதல் வாழ்க்கை :

நிறைவான வாழ்க்கை. அவ்வப்போது சண்டை வரும், அம்மாவை நினைத்து அழுகை வரும்,அப்பாவை நினைத்து பயம் வரும்,அப்பத்தாவை நினைத்தாலே காதை மூடிக் கொள்வேன்.

பல நேரங்களில் பல இடங்களில் உறவுகளின் தேவை,அரவணைப்பு கிடைக்க வேண்டியிருந்தது. தனியாக சமாளித்தேன் மாமாவின் துணையுடன்.

மீண்டும் ஊருக்கு :

மீண்டும் ஊருக்கு :

நாளைக்கு ஊருக்கு போகப்போறோம் என்ற உற்சாகத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டேன். காலையில் எழுந்து பாப்பாவுக்கான பிளாஸ்க் மட்டும் நிரப்பிக் கொண்டால் போதும்.

சிகெரட்டை புகைத்துவிட்டு வாய் கொப்பளித்தபடி மேடம் ரெடியாகிட்டிங்க போல என்றான்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.

மனம்கொள்ளா தவிப்பு,என்னைப்பார்த்து ஒவ்வொருவரும் என்ன செய்வார்கள் என்று நினைக்க நினைக்க தூக்கமே வரவில்லை காட்சிகள் விரிந்து கொண்டேயிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக மாமா இரவில் இரண்டு முறை விழித்தான். இரண்டு முறையும் பால்கனிக்கு சென்று புகைத்துவிட்டு ஹாலில் படுத்துக் கொண்டான்.

நினைவுப்படுத்திக் கொண்டே... :

நினைவுப்படுத்திக் கொண்டே... :

ஏய் ஊருக்கு போனும்ல என்று எழுப்பியதிலிருந்து காலையில் தோசை சுட்டுக் கொடுத்து,குழந்தைக்கு பால் கலந்து புகட்டினான். நைட் புள்ளைய தூக்கிட்டு அலையாத பனி சேராது.

நிச்சயதார்த்தம் அப்போ ப்ளூ கவுன் போடு தலையில போடுற பேண்ட் எடுத்துட்டல்ல? போன் சார்ஜர்... ஒவ்வொன்றாய் கேட்டு நினைவுப்படுத்தினான்.

தங்கம் பத்ரமா போய்ட்டு வா பாப்பாவ ஜாக்கிரதையா பாத்துக்கோ போன் பண்ணு சரியாடீ என்று கதவை தாளிட்டு பஸ் ஏறும் வரை பேசிக் கொண்டேயிருந்தான்.

பஸ் கிளம்பிவிட்டது.

மறையும் நினைவுகள் :

மறையும் நினைவுகள் :

சரி மாமா, நீ ஒழுங்கா சாப்டு ரெண்டு நாள்ல வந்துருவேன் எல்லாம் பாத்துக்குறேன். போன் பண்றேன் என்று டாட்டா காண்பித்தேன். நான்கு மணி நேரப் பயணம் தான்.

மறைந்து போகும் ஜன்னலோரக் காட்சிகளைப் போல நம் நினைவுகளும் மறந்து போனால் என்ன என்று தோன்றியது.

சிறிது நேரம் கண்மூடினேன்.

மாமா அலுவலகத்தை அடைந்திருப்பான். போன் செய்தேன் எடுக்கவில்லை. இரண்டாவது முறை போன் செய்தேன் மீட்டிங் என்று மெசேஜ் வந்தது.

இரவு மணி ஏழாகிவிட்டது.

நீ மட்டும் போதும் :

நீ மட்டும் போதும் :

மாமா பைக் சத்தம். கங்கா அக்கா வீட்டில் பாப்பாவை விட்டுவிட்டு வெராண்டாவிற்கு சென்றேன் ஹெல்மெட்டை கழற்றியவனுக்கு அதிர்ச்சி.... எதுவும் பேசவில்லை.

மேலும் கீழுமாய் பார்த்தான்.

அவன் மனதில் பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தது வார்த்தைகள் ஒன்றும் வெளிப்படவில்லை.

இடுப்பை அணைத்து நெஞ்சில் சாய்ந்து கொண்டு சொன்னேன்.

நேற்றிலிருந்து அடக்கியிருந்த வார்த்தைகள் யாவும் கண்ணீராய் கொட்டியது. மறுபடியும் அழுத்த உச்சரித்தேன்.

"எனக்கு நீ மட்டும் போதும் மாமா".

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Romantic love story about a couple

Romantic love story about a couple
Desktop Bottom Promotion