ஒரு குழந்தைக்கு அப்பா எவ்வளவு முக்கியமானவர், ஒரு அப்பாவின் அன்பால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்!

Father's Day 2024: ஒரு குழந்தையின் வாழ்வில் தந்தையின் பங்கு என்பது ஆழமானது மட்டுமல்ல மிகவு‌ம் அர்த்தமானதும் கூட. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பை பற்றி நாம் நிறைய அறிந்து இருப்போம். ஆனால் ஒரு அப்பாவுக்கும் ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பானது உணர்வுக்கு அப்பாற்பட்டது.

வாழ்க்கையில் துவண்டு விழும் போது ஒரு தோழன் வேண்டும் என்பார்கள். அப்படி எத்தனையோ மகன்கள் மற்றும் மகள்கள் வாழ்வில் ஒரு அப்பா தோழனாக இருந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். எனவே அப்பாவின் துணை என்பது ஒரு குழந்தையின் வாழ்நாள் வளர்ச்சியையும் நம்பிக்கையையும் தருவது.

Father s Day 2024 How Does A Father s Presence Or Absence Shape His Children s Identity

இதுவே அந்த அப்பா இல்லாவிட்டால் அந்த குழந்தை எந்த மாதிரியான உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்கிறது, எந்த மாதிரியான நன்மைகளை தன் வாழ்வில் இழக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம். இந்த தந்தையர் தினத்தில் ஒரு தந்தை இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் இல்லாவிட்டால் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என அறிவோம்.

ஒரு தந்தையின் இருப்பால் குழந்தை பெறும் நேர்மறை நன்மைகள் என்னென்ன?

உணர்வுப்பூர்வமான வளர்ச்சி

ஒரு தந்தையின் இருப்பு குழந்தைக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. இதனா‌ல் குழந்தையின் சுய மதிப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையை அது வளர்க்கிறது. குழந்தைகளுடன் அன்பாக விளையாடுதல், அவர்களுடன் உரையாடுவது, நிபந்தனையற்ற அன்பு இவற்றின் மூலம் ஒரு தந்தை குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணர்ச்சிப் பிணைப்புகளை கடத்துகிறார். இதன் மூலம் ஒரு குழந்தை தன்னுடைய உணர்வுகளை திறம்பட கட்டுப்படுத்தவும் கற்றுக் கொள்கின்றனர். தந்தையுடன் நேர்மறையான உறவைக் கொண்ட குழந்தைகள் அதிக அளவு சுயமரியாதை, பச்சாதாபம் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வெளிப்படுத்துகின்றன என ஆராய்ச்சி கூறுகிறது.

ரோல் மாடல்

ஒரு குழந்தைக்கு அவருடைய தந்தை தான் சிறந்த ரோல் மாடல். சிறந்த ஹீரோவும் ஆவார். ஏனெனில் தந்தையின் தினசரி செயல்களையும், தொடர்புகளையும் குழந்தைகள் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு தந்தையிடம் இருந்து விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். மரியாதை, இரக்கம் போன்ற மதிப்புமிக்க வாழ்க்கை பாடங்களையும் ஒரு தந்தையிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் அந்த குழந்தை ஒரு சமுதாயத்தில் இரக்கமுள்ள அதே நேரத்தில் ஒரு பொறுப்பானவர்களாக வளர்கிறார்கள்.

அடையாளத்தை உருவாக்குதல்

குழந்தைகளின் அடையாள உணர்வை கட்டமைப்பதில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. பகிரப்பட்ட அனுபவங்கள், மரபுகள், குடும்பக் கதைகள் மூலம் தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு சொந்தமான மற்றும் கலாச்சார அடையாளத்தின் வலுவான உணர்வை வளர்க்க உதவுகிறார்கள். அதே மாதிரி தந்தை தங்கள் குழந்தைகளின் பாலின அடையாளம் மற்றும் ஆண்மை பற்றிய புரிதலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது.

கல்வி மற்றும் தொழில்

ஒரு குழந்தையின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு மிகப்பெரியது. எனவே தான் தந்தையிடம் ஈடுபாடு கொண்டுள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த சாதனைகளை தொடரும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சி கூறுகிறது.

ஒரு தந்தை இல்லாவிட்டால் குழந்தைக்கு எந்த மாதிரியான எதிர்மறை தாக்கங்கள் ஏற்படும்?

உணர்ச்சி ரீதியான சவால்கள்

தந்தை இல்லாதது குழந்தைக்கு ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த குழந்தை கைவிடுதல், பாதுகாப்பின்மை, குறைந்த சுயமரியாதை போன்ற உணர்வுகளுக்கு உள்ளாகும். தந்தை இல்லாமல் வளரும் குழந்தைகள் ஒரு ஆரோக்கியமான இணைப்புகள் மற்றும் உறவுகளை உருவாக்க போராடலாம். தந்தையின் இழப்பு அவர்களை ஏங்கச் செய்யலாம். இதனால் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் நடத்தை பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கலாம். பல்வேறு மனநலச் சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

குழப்பமடைதல்

தந்தை தான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டி. எனவே தந்தை இல்லாத குழந்தைகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல்களை சந்திக்கலாம். குழந்தைகள் தங்கள் கலாச்சார பாரம்பரியம், குடும்ப மரபுகள் மற்றும் சுய உணர்வு ஆகியவற்றிலிருந்து துண்டிக்கப்படுவதை உணர நேரிடலாம். தந்தை என்ற ஆண் இல்லாததால் குழந்தைகள் ஆண்மை மற்றும் அவர்களின் சொந்த பாலின அடையாளத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் திண்டாட நேரிடலாம். இது பாதுகாப்பின்மையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

கல்வி மற்றும் தொழில்

தந்தை இல்லாமல் வளரும் குழந்தைகள் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறைந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பின்மை, அதிக வறுமை போன்ற பிரச்சினைகளை குழந்தை சந்திக்க நேரிடலாம். தடைகளை உடைக்க தந்தை எனும் ஆதரவு இல்லாமல் நம்பிக்கை மற்றும் பின்னடைவு போன்றவற்றை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

நடத்தை சிக்கல்கள்

தந்தையின்றி வளரும் குழந்தை போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தவறான நடத்தை, போதைப் பொருள் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என ஆராய்ச்சி கூறுகிறது. தந்தையின் மேற்பார்வை இல்லாத குழந்தைகள் சமூகம் உண்டாக்கும் வெளிப்புற அழுத்தங்களுக்கு உள்ளாகலாம். குழந்தைகள் ஆபத்தான நடத்தைகளில் ஈடுபட நேரிடலாம். எனவே ஒரு தந்தை இல்லாதது குழந்தை நடத்தை சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். குற்றம் சார்ந்த செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். என்ற திருக்குறளுக்கு இணங்க ஒரு தந்தையின் பங்கு ஒரு குழந்தையின் வாழ்வில் சாலச் சிறந்தது.

Desktop Bottom Promotion