For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் கருப்பி, குண்டு.., அதனால என்ன இப்போ? 37 வயசாகியும் கல்யாணம் ஆகல... - My Story #306

நான் கருப்பி, குண்டு.., அதனால என்ன இப்போ? 37 வயசாகியும் கல்யாணம் ஆகல... - My Story #306

By Staff
|

நான் கருப்பி, குண்டு... தங்க்லீஷ்ல எழுதுனா Karupi, Gundu... சுருக்கமா KG...இதுதான் என் பிரச்சனை... உடல் எடை.. நான் என்ன பண்றது மரபணு ரீதியான பிரச்சனை. என் பாட்டி, அம்மா எல்லாருமே குண்டு.

Real Life Story: YES! Im Black and Fat, So What? 37 Years Old and Still Not Married!

Image Source and Courtesy: blackgirlsguidetoweightloss

தமிழனோட அடையாளம் கருப்புன்னு வாய் கிழிய சொல்லுவாங்க. ஆனா, கல்யாணம் பண்ணிக்கும் போதும் மட்டும் இவங்களுக்கு கருப்பான பொண்ணுன்னா பாவக்கா மாதிரி கசக்கும். இது நான் வாங்கிட்டு வந்த வரமா என்ன? சயின்ஸ்.. நான் சாகுற வரைக்கும் இப்படி தான் இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொடுமை!

கொடுமை!

இது யாருக்கும் புரியாது. நான் கடந்த பாதை வலியானதுன்னு சொல்றது விட, கொடுமையானது. ஸ்கூல் நாட்கள்ல இருந்து, காலேஜ், வர்க் ப்ளேஸ்னு எல்லா இடத்துலையும் அதிகமா கேலிக்கு உண்டான பொண்ணு நான் தான். ஒருத்தரோட பேனா, பென்ஸில், வாட்டர் பாட்டில் எடுத்து யூஸ் பண்ணனும்னா கூட அவங்கக்கிட்ட கேட்ட பிறகு தான் யூஸ் பண்ணனும்.

அதுதான் மேனர்ஸ்னு தெரிந்த அதிமேதாவிங்க கூட, என்ன மாதிரியான கருப்பான, குண்டான பொண்ணுங்கன்னா எங்கக்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம.. அது எங்கள ஹர்ட் பண்ணுமா, பண்ணாதான்னு தெரிஞ்சுக்காம போற போக்குல கேலி, கிண்டல் பண்ணிட்டு போயிடுறாங்க.

சங்கடம்!

சங்கடம்!

உங்கள பொறுத்தவரைக்கும் உங்கள் வாழ்க்கையில ஒரு ரொம்ப சீக்கிரமா, எளிமையா மறந்துட்டு நகர்ந்து போற ஒரு தருணம். ஆனா, என் வாழ்க்கையில அது ஆறாது காயம். மனசுக்குள்ள எப்போதுமே வலிச்சுட்டே இருக்க ஒரு தருணம். எத்தனை ராத்திரி நான் இத நெனச்சே வருந்திட்டு இருக்க முடியும்.. பல நேரம் கண்ணாடி முன்னாடி என்ன நானே நிர்வாணமா பார்த்து சங்கடப்பட்டிருக்கேன், அழுதுருக்கேன்.

பாடி ஷேம்!

பாடி ஷேம்!

பாடி ஷேமிங்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவாங்க. அதாவது ஒருத்தரோட உடல் வாகு மற்றும் நிறத்த வெச்சு கேலி பண்றது. அதுவும் ஒருவகையில பாலியல் ரீதியான தாக்குதல் தான். இதுக்கும் ஒரு கடுமையான சட்டத்த கொண்டு வரணும். அப்ப தான் அதோட வலி என்னனு இவங்களுக்கு எல்லாம் புரியும். இதுல பெரிய கொடுமை என்ன தெரியுங்களா? சில சமயம் பொண்ணுங்களே கேலி, கிண்டல் பண்ணுவாங்க... ஏம்மா... உனக்கு இருக்க அதே தான் எனக்கும்.. அத ஏன் மறந்துட்டன்னு எனக்கு தெரியல.

நீ யாரு?

நீ யாரு?

இங்க சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு? உனக்கு அரவிந்த்சாமி மாதிரியான மாப்பிளை கேட்குதான்னு கேட்பாங்க. அதென்னங்க.. எனக்கு ஒன்னும் புரியல... ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க பொண்ணுங்க தான் அரவிந்த்சாமி மாதிரியான பசங்கள கட்டிக்கனுமா..? ஏன் குறைந்தபட்சம் பார்த்து ரசிக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? நான் யார ரசிக்கணும், நான் யார விரும்பனும், நான் யார கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு கோடு போடுறதுக்கு நீ யாரு முதல்ல?

மனசு!

மனசு!

சொல்லக் கூடாது தான்... அப்படியே நீ சொல்றது தான் சட்டம்னு வெச்சுப்போம்.. ஐஸ்வர்யா ராய் நிஜ வாழ்க்கையில கல்யாணம் பண்ணிக்கிட்ட அபிஷேக் பச்சன் என்ன அவ்வளோ அழகா? காதல், கல்யாணம்ங்கிறது அதுவா நடக்கணும்... அது ஒரு பிராசஸ். அதுக்கு சட்டத்திட்டம் எல்லாம் இல்ல. அதுக்கு அப்படின்னா என்னனு கூட தெரியாது. கழுத்துக்கு கீழ எல்லா ஆம்பளையும், பொம்பளையும் ஒன்னு தான். முகமும், மனசும் தான் வேற வேற.. அதுல முகம் பிறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் மாறிக்கிட்டே தான் இருக்கும். மனசு மட்டும் தான் வாழ்நாள் முழுக்க அப்படியே இருக்கும்.

கட்டிப்பீங்களா?

கட்டிப்பீங்களா?

உலகத்துலேயே இந்த பொண்ணு / பையன் தான் அழகுன்னு ஒருத்தர உதாரணமா எடுத்துப்போம். ஆனா, அவங்களுக்கு போதை, குடி, தவறான சவகாசம், சொல்ல முடியாத நோய் எல்லாம் இருக்குன்னு வெச்சுப்போம்... பரவாயில்ல அழகா இருக்காங்கன்னு போய் கட்டிப்பீங்களா? கல்யாணத்துக்கு முதல் தகுதி நல்ல மனசு, குணம், ஒரு குடும்பத்த வழிநடத்த தேவையான முதிர்ச்சி.

ஆனா, இத யாரும் எதிர்பாக்குறதே இல்ல.. நல்லா அழகா இருக்கனும், குழந்தை பெத்து கொடுக்கனும். அவ்வளோ தான் இவங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுகளுக்கு வெச்சிருக்க க்ரைடீரியா.

ஆறுதல்?

ஆறுதல்?

வாழ்க்கையில என்னால மறக்க முடியாத காயங்கள் நிறையா இருக்கு. அதுல நான் மறக்க முடியாத நபர்கள் நிறையா பேர் இருக்காங்க. அவங்க ஒன்னும் என் வாழ்க்கையில நிறையா உதவி இல்ல அன்பு செலுத்துன ஆட்கள் இல்ல. எல்லாரும் என்ன மனம் நொந்து போகுற மாதிரி கேலி கிண்டல் பண்ணவங்க.

கருப்பி, குண்டுன்னு சொல்றத எல்லாம் ஏம்மா நீ பெருசா எடுத்துக்குற காதுக் கொடுத்து கேட்காதன்னு உங்கள்ல யாராச்சும் எனக்கு ஆறுதல் சொல்லலாம். இருக்கட்டும்.. இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.. அதுக்கப்பறமும் நீங்க எனக்கு ஆறுதல் சொல்வீங்களான்னு பார்ப்போம்.

இவக்கூட எப்படி டா...

இவக்கூட எப்படி டா...

என் வாழ்க்கையில நடந்த ஒரு உதாரணம். ட்ரெயின்ல போயிட்டு இருந்தப்ப என்ன பார்த்து ஒரு பையன் சொன்ன கமெண்ட் இது... அது எப்படி இருக்குன்னு நீங்களே சொல்லுங்க... "இவள எல்லாம் எப்படிடா...... ஃபர்ஸ்ட் நைட்லயே அவன் ஓடிர மாட்டான்...". இது ஒரு சாம்பிள் தான்.

என்ன, என் உருவத்த, நிறத்த வெச்சு என்னோட தாம்பத்திய வாழ்க்கை வரைக்கும் கமெண்ட் பண்ண உங்களுக்கு யார் உரிமை கொடுத்தா? நீ என்ன பெக்கல, நீ எனக்கு சோறு போடல... நான் யாருன்னே உனக்கு தெரியாது. அந்த ஒரு நிமிஷம் நீ வாயார சிரிக்க, உன்ன சுத்தி இருக்கவங்கள சிரிக்க வைக்க... நீ என்ன ஒரு கருவியா பயன்படுத்திட்டு நகர்ந்து போயிட்ட.

கமெண்ட்!

கமெண்ட்!

என்ன இப்படி கமெண்ட் பண்ண அந்த பையன் நினைவுல இதெல்லாம் இருக்கவே இருக்காது. (ஒருவேளை இதைப்படிச்சா அவனுக்கு திரும்ப நினைவு வரலாம்). ஆனா, என் வாழ்க்கையில அதுவொரு ஆறாத காயம். அதுனாலயே, அதுக்கு பயந்து... அப்படி ஒரு சம்பவம் நடந்திருமோன்னு எனக்கு கல்யாணம் மேல இருந்து ஆசையே குறைஞ்சிடுச்சு.

அவங்க ரொம்ப ஈசியா கடந்து போயிடுறாங்க. ஆனா, அந்த வார்த்தைகள் எல்லாம் மவுன்ட் ரோட்ல வெச்ச தலைவர்கள் சிலை மாதிரி என் மனசுக்குள்ள அழுக்கு படிஞ்சு அப்படியே தேங்கி கிடக்கு.

தகுதி இல்ல!

தகுதி இல்ல!

கல்யாணம்ங்கிறது வியாபாரம் ஆனதுல இருந்து என்ன மாதிரியான பொண்ணுங்க வாழ்க்கை ரொம்ப மோசமா போச்சுன்னு சொல்றதவிட, கவலைக்கிடமா இருக்குன்னு தான் சொல்லணும்.

ஒருக்கட்டதுல ரெண்டாதாரமா கட்டிக்கொடுக்க எல்லாம் பேச்சு வார்த்தை நடந்துச்சு. முப்பதுக்கு அப்பறம் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். நான் எனக்கு அழகு தான். என்ன கல்யாணம் பண்ணிக்க தான் இங்க யாருக்கும் தகுதி இல்லை.

சந்தோஷம்!

சந்தோஷம்!

நான் நல்லா சமைப்பேன், எல்லார் மேலையும் பாசமா இருப்பேன்கிறது எல்லாம் எனக்கான தகுதியா சொல்லிக்க விரும்புல. ஏன்னா இது இந்த யுகத்துல ஆண், பெண், இருவர் கிட்டயும் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி.

இந்த கருப்பி, குண்டச்சிக்குன்னு நிறைய தகுதிகள் இருக்கு. நல்லா படிச்சு, நல்ல வேலையில... என்ன ஏளனம் பண்ணவங்களவிட அதிகமா சம்பாதிக்கிற நிலைமைல தான் தான் இருக்கேன். என் சொந்த சேமிப்புல.. கூட ஹவுஸிங் லோன் போட்டு வீடு வாங்கி இருக்கேன்.

எல்லாத்துக்கும் மேல கருப்பான அழகான பெண் குழந்தைய தத்தெடுத்து வளர்த்துட்டு வரேன். இதுக்கு மேல வேற சந்தோஷம் என்ன இருக்கு.

அடையாளம்!

அடையாளம்!

இன்னமும் பஸ், ட்ரெயின், பொதுவிடங்கள்ல என்ன வெறும் கருப்பியா பார்க்குற கூட்டம் நிறையா இருக்கு. அவங்க எல்லாம் எனக்கு குருடர்களா தான் தெரியிறாங்க. எனக்கு தைரியம் சொல்லி வளர்க்க யாரும் இல்ல. அப்பா, அம்மா கூட திட்டித்திட்டு தான் வளர்த்தாங்க. அவங்களுக்கு மனசுல நான் ஒரு பாரமா தான் இருந்தேன்.

முப்பது வயசுக்கு மேல நானா வளர்த்துக்கிட்ட தைரியம் இது. ஆனால், என் பொண்ணு அப்படி இருக்க மாட்டா. அவள நிச்சயமா இந்த உலகம் அழகியாவும், ரோல் மாடலாவும் பாக்குற மாதிரி ஆளாக்க போறேன். நிறமும், உடல் அளவும் ஒரு மனுஷனோட / மனுஷியோட அங்கம் தானே தவிர... அது நிரந்திர அடையாளம் இல்ல. அத எல்லாரும் புரிஞ்சுக்கணும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: YES! Im Black and Fat, So What? 37 Years Old and Still Not Married!

Real Life Story: YES! Im Black and Fat, So What? 37 Years Old and Still Not Married!
Desktop Bottom Promotion