ஒரு கப் கோதுமை மாவு இருந்தா.. நைட் இந்த டின்னர் செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Wheat Parotta Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோர் பரோட்டா கேட்கிறார்களா? அப்படியானால் கடைகளில் விற்கப்படும் மைதாவால் செய்யப்பட்ட பரோட்டாக்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு வீட்டிலேயே லேயர் பரோட்டாவை செய்து கொடுங்கள். இந்த கோதுமை பரோட்டாவிற்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம். ஒருவேளை பெஸ்ட் சைடு டிஷ் என்றால் வெஜிடேபிள் குருமாவை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு கோதுமை பரோட்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை பரோட்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wheat Parotta How To Make a Wheat Parotta Recipe

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 10 பல்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, 1/2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் வெண்ணெயை எடுத்து, அதில் அரைத்த பூண்டு, கொத்தமல்லி மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை சரிசம அளவில் உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த ஒவ்வொரு உருண்டையையும் ஒரே அளவில் வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தேய்த்த ஒரு சப்பாத்தியை வைத்து, அதன் நடுவே சிறிது வெண்ணெய் கலவையை வைத்து தடவ வேண்டும். அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து, அதன் மேல் மீண்டும் வெண்ணெயை தடவ வேண்டும். அதேப் போன்று அனைத்து சப்பாத்திகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, அதை அப்படியே இறுக்கமாக சுருட்ட வேண்டும்.
* பின்னர் கத்தியால் அவற்றை துண்டுகளாக்க வேண்டும்.
* அதன் பின் ஒவ்வொரு துண்டையும் எடுத்து, அதை சற்று தடிமனாக பரோட்டா அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை பரோட்டா தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, May 20, 2024, 19:16 [IST]
Desktop Bottom Promotion