இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும்.. இரத்த சர்க்கரையும் கண்ட்ரோலா இருக்கும்...

Posted By:

Weight Loss Wheat Rava Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உள்ளார்களா? நீங்களும் உங்கள் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? உங்களின் டயட்டில் உங்களுக்கு பிடிக்காத ருசியில்லாத உணவுகள் தான் இருக்குமா?

உங்கள் டயட்டை ருசியானதாக மாற்ற வேண்டுமா? அப்படியானால் எடை இழப்புக்கு உதவும் கஞ்சிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சியில் பல உள்ளன. அதுவும் சிறுதானிய கஞ்சி வகைகள் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியும். பேச்சுலர்களும் இந்த கஞ்சியை எளிதில் செய்து சாப்பிடலாம்.

Weight Loss Kanji Recipes How To Make a Wheat Rava Kanji

இப்படியான கஞ்சியை தினமும் உணவில் சேர்க்கும் போது, நீண்ட நேரம் பசி கட்டுப்படுவதோடு, எடை இழப்புக்கும் உதவும். அதுவும் வீட்டில் கோதுமை ரவை இருந்தால் அதைக் கொண்டும் சுவையான கஞ்சியை செய்து சாப்பிடலாம். இதனால் உடல் எடை குறைவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை கொண்டு எப்படி கஞ்சி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை சம்பா ரவை - 1 கப்
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் கோதுமை சம்பா ரவையை நீரில் ஒருமுறை கழுவி, பின் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாசிப்பருப்பையும் நீரில் கழுவி, பின் நீரை ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை வதக்கி, பின் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்த சம்பா கோதுமை ரவையை நீருடன் அப்படியே ஊற்றி, அத்துடன் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சி கெட்டியாக இருந்தால், சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி பரிமாறினால், சுவையான கோதுமை ரவா கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 18, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion