பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்

Posted By:

Punjabi Chole Masala Recipe in Tamil: தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளைப் பொறுத்தவரை அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கும். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சட்னி அல்லது குருமா போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் எத்தனை நாளுக்குத்தான் அதையே செய்து கொண்டிருப்பது.

Punjabi Chole Masala Recipe How to Make at Home in Tamil

புதிதாக சைடிஷ் செய்ய விரும்பினால் இந்த பஞ்சாபி சன்னா மசாலாவை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த பஞ்சாபி சன்னா மசாலா ஹோட்டல்களில் சாப்பிடுவது போல அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சன்னா மசாலா சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த மசாலாவை செய்து கொடுத்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி சன்னா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

குக்கரில் வேகவைக்க:

- 2 கப் கொண்டைக்கடலை இரவே ஊற வைக்கவும்
- 2 பிரிஞ்சி இலைகள்
- 5 பச்சை ஏலக்காய்
- 1 இன்ச் பட்டை
- 5 மிளகு
- 2 பிளாக் டீ பைகள்
- 1 ஸ்பூன் உப்பு
- தேவையான அளவு உப்பு

மசாலா செய்ய:

- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 கிராம்புகள்
- 1 கப் துருவிய வெங்காயம்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 அரைத்த தக்காளி
- 3 ஸ்பூன் சோலே மசாலா
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மிளகுத்தூள்
- கால் ஸ்பூன் சீரகத்தூள்
- தேவையான அளவு உப்பு

அலங்கரிக்க:

- 1 ஸ்பூன் நெய்
- 1 இன்ச் நீளமாக நறுக்கிய இஞ்சி
- ¼ ஸ்பூன் கரம் மசாலா
- ½ ஸ்பூன் கசூரி மேத்தி
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை:

- 2 கப் கொண்டைக்கடலையை அவை மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் ஊறவைக்கவும். கொண்டைக்கடலை ஊறிய தண்ணீரை வடித்துவிடவும்.

- பின்னர் கொண்டைக்கடலையை ஒரு பிரஷர் குக்கருக்கு மாற்றி, அதனுடன் 2 பிரிஞ்சி இலை, 5 ஏலக்காய்கள், 1 இன்ச் பட்டைத் துண்டு மற்றும் 5 மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- அத்துடன், நிறத்திற்காக 2 பிளாக் டீ பைகள் , 5 கப் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றையும் சேர்க்கவும்.

- குக்கரை மூடி, அதிக தீயில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு அடுப்பை மிதமான அளவில் வைத்து, கொண்டைக்கடலையை மேலும் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

- அதன்பின் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி, அதிலுள்ள அழுத்தம் தானாகவே குறையும் வரை காத்திருக்கவும்.

- பிரஷர் அடங்கியதும், டீ பைகள் மற்றும் பிரிஞ்சி இலைகளை வெளியே எடுத்துவிடவும்.

- ஒரு பெரிய வாணலியில் மிதமான தீயில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கவும். அதில் 2 கிராம்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கி, அது லேசான பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின்னர் 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் தக்காளியை வதக்கவும்.

- இடையில் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிடவும். தக்காளி நன்கு வதங்கியதும் 3 ஸ்பூன் சோலே மசாலா, ½ ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் சீரகத் தூள் மற்றும் ½ ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்குமாறு கிளறவும். சுண்டல் வேகவைத்த தண்ணீரையும் அதனுடன் கூடுதலாக ½ கப் தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் வேகவிடவும்.

- மிதமான தீயில் நீண்ட நேரம் வேகவைப்பதே இந்த மசாலாவிற்கு சிறந்த சுவையைக் கொடுக்கும்.

- கொண்டைக்கடலை வெந்து கொண்டிருக்கும்போதே, ஒரு கரண்டியைப் பயன்படுத்தி சில கொண்டைக்கடலையை மசித்து விடவும். 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.

- ஒரு சிறிய வாணலியில் மிதமான தீயில் 1 ஸ்பூன் நெய்யைச் சூடாக்கவும். நெய் சூடானதும், அதில் 1 இன்ச் நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்

- பின்னர் இந்த கலவையை சன்னா மசாலாவில் கொட்டி நன்கு கிளறவும்.

- இறுதியாக ¼ டீஸ்பூன் கரம் மசாலா, ½ டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் அட்டகாசமான பஞ்சாபி சன்னா மசாலா ரெடி!

- இது சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் சாதம் என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 5, 2026, 14:55 [IST]
Desktop Bottom Promotion