விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்..

Posted By:

Vilangai Chutney Recipe In Tamil: விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய விளாங்காய் உங்கள் வீட்டில் இன்னும் உள்ளதா? அதை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளீர்களா? ஒருவேளை விளாங்காய் பழுத்திருந்தால், அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். அதுவே பழுக்காமல் காயாக இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இப்படி விளாங்காயைக் கொண்டு சட்னி செய்யும் போது, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Vilangai Chutney How To Make Wood Apple Chutney Recipe

விளாங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், பித்த கோளாறுகள் நீங்கும், இரத்தத்தை சுத்திகரிக்கும். இதுவரை நீங்கள் விளாங்காயை பயன்படுத்தாமல் தூக்கி எறிந்திருந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாமல், இப்படி சட்னி செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு விளாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே விளாங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* விளாங்காய் - 1
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் விளாங்காயினுள் உள்ள சதைப் பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு சீரகம், மிளகு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் எடுத்து வைத்துள்ள விளாங்காயை சேர்த்து வதக்கி, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காய், வரமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், விளாங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 17, 2026, 20:25 [IST]
Desktop Bottom Promotion