வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

வார இறுதியில் நீங்கள் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்யுங்கள்.

Posted By:

வார இறுதியில் நீங்கள் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பில் அனைத்து பொருட்களுமே வறுத்து அரைத்து செய்யப்படுகிறது. இந்த வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Varutharacha Chicken Kuzhambu Recipe In Tamil

உங்களுக்கு வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

* சிக்கன் - 1 கிலோ

* சின்ன வெங்காயம் - 30 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 4- (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* உப்பு - சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை - சிறிது

தாளிப்பதற்கு...

* சோம்பு - 2 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* பிரியாணி இலை - 1

* ஏலக்காய் - 5

* கிராம்பு - 5

* பட்டை - 1 துண்டு

வறுத்து அரைப்பதற்கு...

* வரமிளகாய் - 10-12

* மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 2 டீஸ்பூன்

* மிளகு - 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - 1 கையளவு

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்

* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, October 16, 2021, 17:52 [IST]
Desktop Bottom Promotion