1/2 கப் உளுந்தும், 2 ஸ்பூன் பச்சரிசியும் வெச்சு.. ஒருடைம் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...

Posted By:

Thayir Bonda Recipe In Tamil: கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் உளுத்தம் பருப்பும், பச்சரிசியும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் தயிர் போண்டாவை செய்யுங்கள்.

இந்த போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சியை தரும் மற்றும் பசியையும் தணிக்கும். முக்கியமாக இந்த போண்டாவை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இது உடலுக்கு சத்தானதும் கூட.

Thayir Bonda How To Make a Curd Bonda Recipe

உங்களுக்கு தயிர் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உளுந்து - 1/2 கப்
* பச்சரிசி - 2 ஸ்பூன்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* குளிர்ச்சியான தயிர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* காராபூந்தி - சிறிது

மசாலா மோர் செய்வதற்கு...

* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஜாரில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் சிறிது நீரைத் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன், 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, கைகளால் நன்கு அடித்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் 2 பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, சிறிது கொத்தமல்லியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, அதன் சாற்றினை மட்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றுடன் 1/4 டீஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் புளித்த தயிர் மற்றும் 2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இப்போது மசாலா மோர் தயார்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு மாவை கைகளில் எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து, மசாலா மோருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, மோருடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டையான பாத்திரத்தில் 1 கப் தயிரை ஊற்றி, அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, கட்டிகளின்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள போண்டாவை எடுத்து தயிருடன் சேர்த்து கிளறி, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் காராபூந்தியை தூவினால், சுவையான தயிர் போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 1, 2025, 16:37 [IST]
Desktop Bottom Promotion