1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்

Posted By:

Thattapayaru Kara Kuzhambu Recipe in Tamil: சாம்பாருக்கு அடுத்தப் படியாக பெரும்பாலான வீடுகளில் வைப்பது கார குழம்புதான். ஒரே மாதிரியாக கார குழம்பு வைத்து போரடித்து விட்டதா? ஆம் எனில், அப்படியே கொங்கு ஸ்டைலில் தட்டைப்பயறு காரக் குழம்பு வைக்க முயற்சி செய்யுங்கள். இந்த தட்டைப்பயறு காரக் குழம்பு சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. சூடான சாதத்துடன் இந்த குழம்பை சேர்த்து சாப்பிட வேற லெவலில் இருக்கும்.

Thattapayaru Kara Kuzhambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக கார குழம்பு என்றாலே காய்கறிகளை வைத்துதான் செய்வார்கள், ஆனால் தட்டைப்பயிறை வைத்தும் சுவையான கார குழம்பு செய்யலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம். இந்த குழம்பு சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு சுவையான தட்டைப்பயறு கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்துங்க.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க:

- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் பச்சரிசி
- 5 பல் பூண்டு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/4 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் மல்லி விதை
- 3 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/3 கப் துருவிய தேங்காய்
- 1 கப் தண்ணீர்

தட்டைப்பயறு வேக வைக்க:

- 2 கப் தண்ணீர்
- 1/2 கப் தட்டைப்பயறு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் உப்பு
- 1 கப் நறுக்கிய உருளைக்கிழங்கு

பிற பொருட்கள்:

- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 2 பல் பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 2 நறுக்கிய தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் வெல்லம்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- புளி ஊறவைக்க 3/4 கப் சுடுதண்ணீர்
- 1 கப் தண்ணீர்

செய்முறை:

- தட்டைப்பயறை சுத்தம் செய்து கழுவி, ஒரு குக்கரில் போடவும். அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கரில் மஞ்சள் தூள், நல்லெண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

- 10 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரில் உள்ள அழுத்தம் வெளியேறும் வரை காத்திருக்கவும். குக்கரைத் திறந்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து, மேலும் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். அழுத்தம் தானாக வெளியேறட்டும்.

- ஒரு அடி கனமான பாத்திரத்தில், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். அதனுடன் பச்சரிசி, பூண்டு மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.

- பின்னர் மீதமுள்ள மசாலாப் பொருட்கள் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை சில நொடிகள் வறுக்கவும்.

- அதன்பின் துருவிய தேங்காயைச் சேர்த்து இன்னும் சில நொடிகள் வறுக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

- புளியை சூடான நீரில் 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளியை நன்றாகப் பிசைந்து சாறு, அதிலுள்ள கொட்டை மற்றும் நார் போன்ற பகுதிகளை நீக்கிவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்க்கவும். பிறகு கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- பின்னர் அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, வாணலியை மூடி வைத்து, தக்காளி நன்றாகக் குழைந்து வேகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- மிளகாய் தூளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். புளிக் கரைசல் மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும்.

- பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை மூடி, குழம்பை 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

- அதன்பின் வேகவைத்த தட்டைப்பயறு மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, மேலும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

- அவ்வளவுதான் அடுப்பை அணைத்து விடவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 7, 2026, 13:23 [IST]
Desktop Bottom Promotion