தித்திக்கும்... சுவையான.. சுருள் அப்பத்தை செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted By:

Surul Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அதுவும் எப்போதும் போன்று பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் இட்லி அரிசி இருந்தால், அதை 2 மணிநேரம் ஊற வைத்து, அரைத்து சுருள் அப்பத்தை செய்யுங்கள்.

இந்த சுருள் அப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு சுருள் அப்பம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Surul Appam Recipe

கீழே சுருள் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இட்லி அரிசி - 1 கப்
* துருவிய தேங்காய் - 1 1/2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1-2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் இட்லி அரிசியை 2 முறை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த அரிசியை 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* மாவானது நன்கு நீர் போன்று இருக்க வேண்டும். அதாவது ரவா தோசை மாவு பதத்தில் இந்த மாவு இருக்க வேண்டும்.
* பிறகு அதில் சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, டிஷ்யூ பேப்பர் கொண்டு தடவி விட வேண்டும்.
* அடுத்து தயாரித்து வைத்துள்ள மாவை வெளியில் இருந்து உள்ளே தோசையாக சுட வேண்டும். (பொதுவாக தோசையை உள்ளிருந்து வெளியே சுற்றுவோம். ஆனால் இதில் தலைகீழாக செய்ய வேண்டும்.)
* பின் அதில் எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த தோசையின் மேல் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையைத் தூவி விட வேண்டும்.
* இறுதியாக அதை சுருட்டினால், சுவையான சுருள் அப்பம் தயார். இதேப் போல் மீதமுள்ள மாவையும் செய்ய வேண்டும்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Monday, December 18, 2023, 16:54 [IST]
Desktop Bottom Promotion