மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்..

Posted By:

Meal Maker Biryani Recipe In Tamil: புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை நிறைய பேர் சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவாளர்கள் ஒரு மாதம் அதை தவிர்த்து இருப்பது என்பது சற்று கடினம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அசைவ உணவுக்கு இணையான சுவையைக் கொண்ட சைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு அசைவ உணவின் மீதான ஆவலை குறைக்க நினைப்பார்கள்.

Soya Chunks Biryani How To Make Meal Maker Biryani Recipe

அப்படி அசைவ உணவுக்கு இணையான சுவையை கொண்ட உணவுப் பொருள்தான் மீல் மேக்கர். இந்த மீல் மேக்கரைக் கொண்டு பிரியாணி செய்தால், மட்டன் பிரியாணியை சாப்பிட்ட ஒரு உணர்வு கிடைக்கும். அதுவும் மீல் மேக்கர் பிரியாணியை தனியாக ஒரு மசாலா பொடியை அரைத்து செய்யும் போது, சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த மீல் மேக்கர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பிரியாணி மசாலா பவுடருக்கு...

* மல்லி - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சுருள் பட்டை - 10 கிராம்
* கிராம்பு - 15
* ஏலக்காய் - 15
* கருப்பு ஏலக்காய் - 2
* மராட்டி மொக்கு - 2
* அன்னாசிப்பூ - 4
* ஜாவித்திரி - 1
* சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
* ஷாஹி ஜீரா - 3/4 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கல்பாசி - 1 டேபிள் ஸ்பூன்
* காய்ந்த ரோஜா இதழ்கள் - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 3 பெரியது
* ஜாதிக்காய் - சிறிய ஏலக்காய் அளவு

ஊற வைப்பதற்கு...

* மீல் மேக்கர் - 1 1/2 கப் (15 நிமிடம் ஊற வைத்தது)
* சீரக சம்பா அரிசி - 2 கப் (25 நிமிடம் ஊற வைத்தது)

மசாலா அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 9
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* வெந்தயக்கீரை - 1/2 கைப்பிடி

பிரியாணி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* ஜாவித்திரி - சிறிது
* பிரியாணி இலை - 1
* கசூரி மெத்திரி - சிறிது
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* அரைத்து வைத்துள்ள மசாலா
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* ஊற வைத்துள்ள மீல் மேக்கர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* எலுமிச்சை சாறு - 3/4 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த அரிசி

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசியை எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 20-25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரியாணி செய்வதற்கு ஒரு மசாலா பொடியை வறுத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை செய்தால், 2 மாதம் வரை வைத்து பிரியாணி செய்யும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.
* அந்த பிரியாணி பொடி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சுருள் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, ஜாவித்திரி, சோம்பு, ஷாஹி ஜீரா, மிளகு, கல்பாசி, காய்ந்த ரோஜா இதழ்கள், கசூரி மெத்தி, பிரியாணி இலை, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடேற்றி இறக்கி தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலா பொடியை ஒரு கண்ணாடி பாட்டில் போட்டு, பிரியாணி செய்யும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பிறகு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, வெந்தயக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பெரிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், ஜாவித்திரி, பிரியாணி இலை, கசூரி மெத்தி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்த மீல் மேக்கரில் உள்ள நீரை பிழிந்து நீக்கி விட்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்த பிரியாணி மசாலாவில் இருந்து 1 டேபிள் ஸ்பூனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 3 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஊற வைத்த அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு, பின் 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 1, 2026, 16:50 [IST]
Desktop Bottom Promotion