வாழைப்பழமும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Banana Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் சாப்பிட சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்களா? குறிப்பாக இனிப்பு போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா?

உங்கள் வீட்டில் வாழைப்பழமும், மைதாவும் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பழத்தைக் கொண்டு ஒரு அட்டகாசமாக சுவையைக் கொண்ட வாழைப்பழ போண்டாவை செய்யுங்கள்.

Simple And Tasty Banana Bonda Recipe

இந்த வாழைப்பழ போண்டா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது இந்த போண்டாவை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிறிய வாழைப்பழம் - 6 (நன்கு கனிந்தது)
* மைதா - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழம், மைதா, பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* மாவை கட்டிகளின்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூனை எடுத்து, அந்த ஸ்பூனில் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் போண்டாக்களாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பழ போண்டா தயார்.

Image Courtesy: cookerypark

[ of 5 - Users]
Story first published: Friday, December 1, 2023, 17:10 [IST]
Desktop Bottom Promotion