நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும்

Posted By:

Shahi Paneer Recipe in Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்ப அதை வைத்து சூப்பரான சைடிஷ் செய்யலாம்? பன்னீர் என்றாலே என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பன்னீர் பட்டர் மசாலாதான், ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது ஷாகி பன்னீர்.

Shahi Paneer Recipe How to Make at Home in Tamil

இந்த ஷாகி பன்னீர் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சைடிஷ்களில் ஒன்றாகும். இந்த ஷாகி பன்னீர் சப்பாத்தி, நாண், பூரி போன்றவற்றுக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும். உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாகி பன்னீரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஷாகி பன்னீரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 200 கிராம் பனீர்
- 1 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
- 3 ஏலக்காய்
- 1 ½ ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ½ ஸ்பூன் மிளகு தூள்
- ¼ கப் ப்ரெஷ் கிரீம்
- ¼ கப் பால்
- 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 ஸ்பூன் வெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 2 ஸ்பூன் கசூரி மேத்தி

செய்முறை:

- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

- ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் ஏலக்காய், பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

- பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, மூடிவைத்து குழைந்து போகும் வரை சமைக்கவும்.

- இதை ஆற வைத்து மிக்சியில் மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- அதேநேரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பன்னீரை நறுக்கி போட்டு வைக்கவும்.

- ஒரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெயைச் சூடாக்கி, அதில் அரைத்த கலவையை சேர்க்கவும்.

- அதன்பின் தக்காளி சாஸ், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

- பின்னர் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கிளறவும்.

- எண்ணெய் பிரிந்து, கலவை கெட்டியான விழுதைப் போல மாறும் வரை வதக்கவும்.

- அதன்பின் தண்ணீரை வடித்து பன்னீர் துண்டுகளைச் சேர்க்கவும்.

- நன்றாக கிளறி பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அதன்பின் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் சூப்பரான ஷாஹி பன்னீர் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 8, 2026, 20:12 [IST]
Desktop Bottom Promotion