1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..

Posted By:

Mutton Thanni Kuzhambu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கப் போகிறீர்களா? அதுவும் வார இறுதி என்பதால் 1/4 கிலோ தான் மட்டன் வாங்கப் போகிறீர்களா? இந்த அளவு மட்டன் கொண்டு நிறைய குழம்பு வைக்க வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் இங்கு வெறும் 1/4 கிலோ மட்டனைக் கொண்டு நாள் முழுவதும் ஊற்றி சாப்பிடுகிற மாதிரி நிறைய குழம்பை எப்படி செய்வதென்று என்பது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்குவத்தில் இதே அளவுகளுடன் செய்தால், இந்த சன்டேவை சிறப்பாக கொண்டு செல்லலாம். முக்கியமாக இந்த குழம்பு இட்லி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Mutton Thanni Kuzhambu How To Make Mutton Thanni Kulambu Recipe

உங்களுக்கு இந்த மட்டன் தண்ணி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் தண்ணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுப்பதற்கு..

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* வரமிளகாய் - 10
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1/2 கப்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்

வதக்குவதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப் அல்லது 150 கிராம்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

வேக வைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1/4 கிலோ
* அரைத்த மசாலா
* தண்ணீர் - 3 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய், மல்லி, மிளகு, கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, கசகசா மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, மசாலாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 3 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி, உயர் தீயில் 1 விசிலும், குறைவான தீயில் 3 விசிலும் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கலந்தால், சுவையான தண்ணி மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 27, 2026, 7:41 [IST]
Desktop Bottom Promotion