காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்..

Posted By:

Mushroom Malai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி காளான் வாங்கி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் கிரேவியை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் காளானை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் காளான் மலாய் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Mushroom Malai Gravy How To Make Mushroom Malai Curry

உங்களுக்கு இந்த காளான் மலாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மலாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பச்சை மிளகாய் - 8
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 4 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5

கிரேவி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காளான் - 200 கிராம் (உப்பு நீரில் கழுவி, நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா
* கரம் மசாலா - 2 ஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* தயிர் - 3 ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் காளானை உப்பு கலந்த நீரில் நன்கு கழுவிவிட்டு, பின் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலை மற்றும் முந்திரியை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காளானை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் விட்டு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கசூரி மெத்தியை சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து வந்ததும், அதை இறக்கி தயிரை சேர்த்து, நன்கு கிளறி, புளிப்புச் சுவை இன்னும் வேண்டுமானால் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், சுவையான காளான் மலாய் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 10, 2026, 20:48 [IST]
Desktop Bottom Promotion