1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது!

Posted By:

Mullangi Aval Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? முக்கியமாக சத்தான டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் முள்ளங்கியும், அரிசி மாவும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் அடை செய்யுங்கள். இந்த அடையை செய்தால், அதற்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால், தேங்காய் சட்னியும், தக்காளி சட்னியும் அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Mullangi Aval Adai How To Make Radish Aval Adai Recipe

உங்களுக்கு இந்த முள்ளங்கி அவல் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி அவல் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 1 1/2 கப்
* முள்ளங்கி - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* அவல் - 4 டேபிள் ஸ்பூன் (10 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், கொத்தமல்லியை சேர்த்து, ஊற வைத்துள்ள அவலை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சுடுநீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் வாழை இலையை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி, சிறிது மாவை எடுத்து வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தட்டி வைத்துள்ள அடையை அப்படியே திருப்பி கல்லில் போட்டு, வாழை இலையை எடுத்து விட்டு, எண்ணெய் ஊற்றி மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து அடையை திருப்பிப் போட்டு மீண்டும் மூடி வைத்து 1 நிமிடம் வேக வைத்து எடுத்தால், முள்ளங்கி அவல் அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 27, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion