லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Soya Pulao Recipe In Tamil: காலையில் ஸ்கூலுக்கு பசங்க லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? எப்போதும் லன்ச் பாக்ஸில் ஒரே மாதிரியான உணவை தான் செய்து கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் சற்று வித்தியாசமான உணவை செய்து கொடுக்க கேட்கிறார்களா?

Lunch Box Recipes How To Make Soya Pulao Recipe In Tamil

உங்கள் பசங்களுக்கு சோயா பிடிக்குமா? அப்படியானால் அந்த சோயாவைக் கொண்டு புலாவ் செய்து கொடுங்கள். இந்த சோயா புலாவ் பிரியாணி போன்ற சுவையில் இருப்பதால், பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சோயா புலாவ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சோயா புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா - 1 கப் (10 நிமிடம் சுடுநீரில் ஊற வைத்தது)

புலாவ் தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பச்சை பட்டாணி - 1 கையளவு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்ழுன்
* மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* வறுத்த சோயா
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* தண்ணீர் - 1/4 கப் + 2 டம்ளர்
* பாசுமதி அரிசி - 1 டம்ளர் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* எலுமிச்சை சாறு - பாதி

செய்முறை:

* முதலில் பாசுமரி அரிசியை நீரில் 2 முறை கழுவி, பின் சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, அதிப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கரை சேர்த்து நன்கு ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை பட்டாணியை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் வறுத்த சோயாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மூடி வைத்து உயர் தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான சோயா புலாவ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 14, 2026, 21:31 [IST]
Desktop Bottom Promotion