வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Lady's Finger Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் என்றாலே வேண்டாம் என்பார்களா? அப்படிப்பட்டவர்களை வெண்டைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? நீங்கள் எப்போதும் வெண்டைக்காய் வாங்கினாலே, அதை புளிக்குழம்பு, சாம்பார், பொரியல் என்று தான் செய்வீர்களா? அதுவும் வெண்டைக்காயை பொரியல் செய்தால், எப்போதும் ஒரே சுவையில் வெறும் மிளகாய் தூளை மட்டும் சேர்த்து தான் செய்வீர்களா?

Lady s Finger Fry How To Make Bhindi Fry Recipe

அப்படியானால் அடுத்தமுறை வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, அதற்கு தனியாக மசாலா பொடியை தயாரித்து சேர்த்து செய்யுங்கள். இப்படி செய்யும் போது, பொரியலின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அதுவும் இப்படி வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, பிடிக்காதவர்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* வெண்டைக்காய் - 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி துணியால் துடைத்து தனியாக சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வரமிளகாய், சீரகம், எள்ளு மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெண்டைக்காய் ஓரளவு வெந்ததும், அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் வைத்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 24, 2026, 14:33 [IST]
Desktop Bottom Promotion