சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க..

Diabetes-friendly Rice In Tamil: உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இந்தியர்களின் பிரதான உணவு அரிசி. ஆனால் இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் அதிகம் உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Top 5 Best Rice Varieties For Diabetes Patients To Eat Without Sugar Spike

ஏனெனில் அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், அதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். அதற்காக அரிசியை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. சரியான அரிசி வகையை தேர்வு செய்து, அவற்றை அளவாக உட்கொண்டு, அத்துடன் காய்கறிகள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் சாதாரண வெள்ளை அரிசியை சேர்ப்பதற்கு பதிலாக, கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் மற்றும் நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய சத்துக்கள் நிறைந்த சில பாரம்பரிய அரிசி வகைகளை சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கலாம். கீழே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த 5 அரிசி வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பழுப்பு அரிசி

வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று அரிசிகளில் ஒன்று தான் பழுப்பு அரிசி. இந்த அரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 50 தான் உள்ளது. இதனால் இது மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரையை நீண்ட நேரம் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த அரிசியில் தவிடு மற்றும் முளை அடுக்குகளை கொண்டிருப்பதால், இதில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

2. சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த அரிசியை கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 45 முதல் 52 வரை ஆகும். எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த அரிசிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் அந்தோசையனின்கள் உள்ளன. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது அழற்சியைக் குறைக்கவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது.

3. பாஸ்மதி அரிசி

சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை பாஸ்மதி அரிசி மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் மற்ற வெள்ளை அரிசி வகைகளை விட, இந்த அரிசியில் GI மிதமான அளவில் உள்ளன. அதாவது இது மெதுவாக இரத்தத்தில் சர்க்கரையை வெளியிடும். இருப்பினும் பழுப்பு பாஸ்மதி அரிசி இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இதில் தவிடு நீக்கப்படாமல் இருப்பதால், நார்ச்சத்து, பி-வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன. முக்கியமாக இந்த வகை அரிசி நல்ல மணத்துடன் இருப்பதால், இதைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரித்து சாப்பிடலாம்.

4. காட்டு அரிசி

காட்டு அரிசி என்பது உண்மையில் ஒரு அரிசி அல்ல, மாறாக ஒரு புல் விதை ஆகும். இதன் சிறப்பான ஊட்டச்சத்து காரணமாக தனித்து நிற்கிறது. இதில் 35-40 அளவில் தான் கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. 1/2 கப் காட்டு அரிசியில் சுமார் 17.5 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும் 1.5 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இது இரத்த சர்க்கரையை சீராக்கவும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டீன், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த மெட்டபாலிச ஆரோக்கியத்திற்கும் நல்லது.

5. கருப்பு அரிசி

கருப்பு அரிசி அதிக சத்துக்களைக் கொண்ட தானியமாகும். இதில் 35-45 அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. அதுவும் இதில் அந்தோசையனின்கள் அதிகமாக உள்ளன. இவை சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கல்களுக்கு முக்கிய காரணமான 'ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை' (oxidative stress) எதிர்க்க உதவுகின்றன. இந்த அரிசியின் நிறமே இதில் நிறைந்துள்ள சத்துக்களை குறிக்கிறது. இந்த அரிசி சர்க்கரை நோய் மட்டுமின்றி, கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, October 24, 2026, 13:08 [IST]
Desktop Bottom Promotion