கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Krishna Jayanthi 2026 Special Nei Appam Recipe In Tamil: கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டில் கிருஷ்ணருக்கு பிடித்த பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபாடு செய்வோம். அதுவும் கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய பலகாரங்கள் பிடிக்கும் என்பதால், இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு நெய் அப்பத்தைம் பலகார பட்டியலில் சேர்த்து செய்து படைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த நெய் அப்பத்தை அரிசி ஊற வைத்து அரைத்து பாரம்பரிய முறைப்படி செய்யும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.

Krishna Jayanthi 2026 Special Recipe How To Make Nei Appam

உங்களுக்கு இந்த பாரம்பரிய நெய் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாரம்பரிய நெய் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப் (4 மணிநேரம் ஊற வைத்தது)
* பொடித்த வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* பெரிய வாழைப்பழம் - 1
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கருப்பு எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை எடுத்துக் கொண்டு, அத்துடன் பெரிய வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதை மூடி வைத்து 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த மாவை நன்கு கிளறி, அத்துடன் வறுத்த எள்ளு விதைகள் மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் நெய் அல்லது எண்ணெயை சிறிது ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான நெய் அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 1, 2026, 17:50 [IST]
Desktop Bottom Promotion