இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்!

Who Should Not Eat Garlic: உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இதில் அல்லிசின் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் என்ன தான் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

Who Should Not Eat Garlic Doctor Shares Side Effects amp amp Risks

உதாரணமாக, அசிடிட்டி உள்ளவர்கள் அதிகமாக பூண்டு சாப்பிட்டால், அது அசிடிட்டியை இன்னும் தீவிரமாக்கிவிடும். இதுப்போன்று குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அல்லது குறிப்பிட்ட மருந்துகளை எடுப்பவர்கள் அதிகமாக பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

டாக்டர்.பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரெல்லாம் பூண்டு அதிகமாக சாப்பிடக்கூடாது, அப்படி அதிகமாக சாப்பிடுவதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து தெளிவாக பகிர்ந்துள்ளார்.

1. இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள்

"இரத்தம் உறைந்து போகாமல் இருப்பதற்காக இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை சிலர் எடுப்பார்கள். குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வந்தவர்களுக்கு, மீண்டும் அவை வராமல் இருக்க இப்படியான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்தை எடுப்பவர்கள் அதிகமாக பூண்டு எடுக்கக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்தால், டபுள் டோஸ் ஆகிவிடும். பின் இரத்தக்கசிவு ஏற்படத் தொடங்கிவிடும். அதுவும் மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படலாம், ஈறுகளில் இரத்தக்கசிவு வரலாம், ஏன் லேசாக அடிப்பட்டாலே அதிகமாக இரத்தம் வெளியேறலாம்" என்று டாக்டர் கூறினார்.

2. லோ பிபி அல்லது குறைவான இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் பூண்டு அதிகமாக சாப்பிடக்கூடாது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதைக் கட்டுப்படுத்த பூண்டு சாப்பிடலாம். ஆனால் லோ பிபி உள்ளவர்கள் சாப்பிட்டால், அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை அதிகரித்து, இரத்தக்குழாய்களை அதிகம் தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேலையை பார்த்து, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை உண்டாக்கலாம்.

3. அல்சர் பிரச்சனை

"வயிற்றில் அல்சர், வயிற்று எரிச்சல், அமில சுரப்பு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அசிடிட்டியை அதிகரித்துவிடும். முக்கியமாக பூண்டு பற்களை பச்சையாகத் தான் சாப்பிடக்கூடாது. தீயில் சுட்டு அல்லது தினசரி உணவில் சிறிது சேர்த்து சாப்பிடலாமே தவிர, அளவுக்கு அதிகமாக இதை எடுக்கக்கூடாது. இல்லையெனில் வயிற்றுப்பிரச்சனையைத் தான் இன்னும் அதிகரிக்கும்" என்று டாக்டர் கூறினார்.

4. IBS பிரச்சனை உள்ளவர்கள்

"IBS பிரச்சனை, அதாவது மலம் கழித்த பின்னரும் மலம் வருவது போன்ற உணர்வை கொண்டவர்கள் அதிகமாக பூண்டு சாப்பிடக்கூடாது. பூண்டில் அல்லிசின் இருப்பது போன்றே, அதில் ப்ரக்டன்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம்" என்று கூறினார்.

5. பூண்டு அழற்சி

"மிகவும் அரிதாக சிலருக்கு பூண்டு சாப்பிட்டாலே, சருமத்தில் அரிப்பு, உதடுகளில் வீக்கம், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படக்கூடும். இப்படியான அறிகுறிகளை சந்திப்பவர்கள் பூண்டு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.

6. பாலூட்டும் தாய்மார்கள்

"பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டு பற்களை அதிகமாக எடுக்கும் போது, அது தாய்ப்பாலில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தி, குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிடும்" என்று டாக்டர் கூறினார்.

எந்த உணவுகளுடன் பூண்டு சேர்த்து சாப்பிடக்கூடாது?

* "பொதுவாக மது அருந்தக்கூடாது. ஒருவேளை மது அருந்தினால், அத்துடன் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்யு தொல்லை, அசிடிட்டியை ஏற்படுத்திவிடும்.

* ஒமேகா-3 சப்ளிமெண்ட்டுகளை எடுப்பவர்களும் அத்துடன் பூண்டு அதிகம் சேர்த்து எடுக்கக்கூடாது.

* வைட்டமின் இ சப்ளிமெண்ட்டுகளை எடுப்பவர்களும் பூண்டு அதிகமாக சாப்பிடக்கூடாது.

* குறிப்பாக காரசாரமாக சாப்பிடுவர்கள் உணவில் பூண்டு அதிகமாக சாப்பிடக்கூடாது. இது அசிடிட்டியை அதிகரித்துவிடும்.

இந்த உணவுப் பொருட்களுடன் தான் பூண்டு சாப்பிடக்கூடாதே தவிர, தனித்தனியாக சாப்பிடலாம்" என்று கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion