1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்

Posted By:

Kondakadalai Sambar Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் சாம்பார் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் கொண்டைக்கடலை சாம்பார் செய்யுங்கள். பொதுவாக கொண்டைக்கடலையை வைத்து குருமா, புளிக்குழம்பு போன்றவற்றைத்தான் செய்வார்கள். ஆனால் அதை வைத்து வீடே மணக்கும் சுவையில் சாம்பாரும் செய்யலாம்.

Kondakadalai Sambar Recipe How to Make at Home in Tamil

வழக்கமான காய்கறி சாம்பார் சாப்பிட்டவர்களுக்கு, இந்த கொண்டைக்கடலை சாம்பார் சற்று புதுவிதமான சுவையில் இருப்பதால், வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த சாம்பார் சாதத்துக்கு மட்டுமின்றி இட்லி, தோசை, ஆப்பம் போன்றவற்றுக்கும் சூப்பராக இருக்கும். இந்த சாம்பாரை செய்வதும் மிகவும் எளிதானதாகும். கொண்டைக்கடலையை செய்யப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமான உணவும் கூட.

உங்களுக்கு சுவையான செட்டிநாடு கொண்டைக்கடலை சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கொண்டைக்கடலை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- கொண்டைக்கடலை - ¼ கிலோ
- துவரம் பருப்பு - ½ கிலோ
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

சாம்பார் மசாலா அரைக்க:

- நெய் அல்லது எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - ¼ மூடி
- பெருங்காயம் - ஒரு பின்ச்

தாளிக்க:

- நெய் - 1 டீ ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
- சுண்டக்காய் வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

- முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை சுத்தமாக அலசி விட்டு தண்ணீரில் ஊறவைக்கவும். குறைந்தது மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும்.

- புளியை ஓடும் தண்ணீரில் அலசி ஓடு அல்லது நார் போன்றவற்றை நீக்கி விட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியது கரைத்து சாறு எடுத்து வடித்து வைக்கவும்.

- துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை அலசி கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், சிறிதளவு எண்ணெய் மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.

- அதே போல் கொண்டைக்கடலையை தனியே குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

- பின் குக்கரை மூடி இரண்டும் 4-5 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி விசில் அடங்கும் வரை ஆற விடவும்.

- தேங்காயை உங்கள் விருப்படி நறுக்கியோ அல்லது துருவியோ எடுத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்க்கவும். பின் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.

- உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின் தேங்காய் சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.

- வறுத்து வைத்த பொருட்கள் ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது சிறிதாக தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் கரைத்து வடிகட்டி வைத்த புளி புளி கரைசலை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

- பச்சை வாசனை நீங்கும் வரை புளி கரைசல் கொதித்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.

- ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- பின் வேக வைத்த பருப்பை நன்கு மசித்து சேர்த்து கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

- மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றவும். பின் கடுகு சேர்த்து பொரிய விடவும். கடுகு வெடிக்கும் சத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும்.

- அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் சுண்டக்காய் வத்தலை சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் வரையும், சுண்டைக்காய் வத்தல் உப்பி வரும் வரையும் வதக்கவும்.

- கடைசியாக கறிவேப்பிலையை சேர்த்து கிளறி, இந்த தாளிப்பை குழம்பில் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான கொண்டைக்கடலை சாம்பார் ரெடி!

- இந்த கொண்டைக்கடலை சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 29, 2026, 13:13 [IST]
Desktop Bottom Promotion