மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்..

Posted By:

Chettinad Vengaya Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? இதுவரை நீங்கள் எத்தனையோ ரசம் செய்திருக்கலாம். ஆனால் வெங்காய ரசம் செய்துள்ளீர்களா? ஆம், இந்த செட்டிநாடு வெங்காய ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த ரசமானது ஒரு புதுமையான சுவையில் இருப்பதால், ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.

Chettinad Vengaya Rasam How To Make Chettinad Onion Rasam Recipe

உங்களுக்கு இந்த செட்டிநாடு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெங்காய ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இடிப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1

கொதிக்க வைப்பதற்கு...

* பழுத்த தக்காளி - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து வடிகட்டிய சாறு)
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 கையளவு (வேக வைத்தது)
* இடித்த பொருட்கள்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 15 (இடித்துக் கொள்ளவும்)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது

பிற பொருட்கள்..

* கொத்தமல்லி - சிறிது
* வெல்லம் - சிறிது

செய்முறை:

* முதலில் இடி உரலில் மிளகு, சீரகம் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இடித்து, ஒரு பச்சை மிளகாயை சேர்த்து லேசாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாறு சேர்த்து, 5 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து, நீருடன் அப்படியே ஊற்றி, அதோடு இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய் கலவையை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை இடித்து சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி, ரசத்துடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அந்த ரசத்தை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி மற்றும் சிறிது வெல்லத்தை சேர்த்து, நுரைக்கட்டத் தொடங்கியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு வெங்காய ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 29, 2026, 14:12 [IST]
Desktop Bottom Promotion