World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்!

World Stroke Day 2026: இன்றைய வாழ்க்கை முறையில் உயர் இரத்த அழுத்தம் என்பது பலரையும் பாதிக்கும் முக்கியமான உடல்நலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால், உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் தான் இது 'அமைதியான உயிர்க்கொல்லி' என்று அழைக்கப்படுகிறது.

World Stroke Day 2026 High BP Without Symptoms Neurologist Explains How It Can Increase Your Stroke Risk

தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் இல்லாததால் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை இல்லை என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில், எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே உயர் இரத்த அழுத்தம் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கக்கூடும். முற்றிய நிலையில், இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தம் எப்படி பக்கவாதத்தை உண்டாக்குகிறது, பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திருநெல்வேலியில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சை நிபுணரான டாக்டர் கல்பனா பெருமாள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

World Stroke Day 2026 High BP Without Symptoms Neurologist Explains How It Can Increase Your Stroke Risk

உயர் இரத்த அழுத்தத்திற்கும் பக்கவாதத்திற்கும் என்ன தொடர்பு?

"நமது மூளைக்கு தொடர்ந்து ஆக்சிஜனும் ஊட்டச்சத்துகளும் நிறைந்த இரத்தம் தேவைப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் நீண்ட காலம் கட்டுப்பாடின்றி இருந்தால், மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம்.

இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படலாம். இது இஸ்கீமிக் பக்கவாதம் (Ischemic Stroke) எனப்படுகிறது. சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தத்தால் பலவீனமடைந்த இரத்த நாளம் வெடித்து, மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்படலாம். இது ஹெமரேஜிக் பக்கவாதம் (Hemorrhagic Stroke) எனப்படுகிறது.

இரண்டு வகையான பக்கவாதங்களும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. மேலும், கை, கால் செயலிழப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு மற்றும் நீண்டகால உடல் குறைபாடுகளுக்கும் காரணமாகலாம்." என்று டாக்டர் கூறினார்.

World Stroke Day 2026 High BP Without Symptoms Neurologist Explains How It Can Increase Your Stroke Risk

பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

"பக்கவாதம் ஏற்படும் போது சில முக்கியமான அறிகுறிகள் திடீரென தோன்றலாம்.

* முகத்தின் ஒரு பக்கம் கோணலாகுதல்.
* ஒரு பக்க கை, காலில் திடீரென பலவீனம் ஏற்படுதல்.
* பேசுவதில் சிரமம் அல்லது பேச்சு குழறுதல்.
* திடீரெனப் பார்வை மங்குதல் அல்லது சமநிலை இழத்தல்.
* காரணமின்றி திடீரெனக் கடுமையான தலைவலி ஏற்படுதல்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். அறிகுறிகள் சில நிமிடங்களில் மறைந்தாலும் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது." என்று டாக்டர் கூறினார்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

"உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் பக்கவாத அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும். அதற்கு, தினசரி உணவில் உப்பின் அளவைக் குறைப்பது, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைச் சீராகப் பராமரிப்பது ஆகியவை முக்கியம்.

மேலும், வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

மருத்துவர் பரிந்துரைத்த இரத்த அழுத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் சீராக இருப்பதாக நினைத்து மருந்துகளைத் தானாக நிறுத்தக்கூடாது." என்றும் டாக்டர் கூறினார்.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பரிசோதனை அவசியம்!

உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிய நம்பகமான வழி, இரத்த அழுத்தத்தை முறையாக அளவிடுவதுதான். குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன், குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது பக்கவாத வரலாறு உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த உலக பக்கவாத தினத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவெனில் அறிகுறிகள் இல்லாதது ஆரோக்கியமாக இருப்பதற்கான உறுதி அல்ல. இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதும் பக்கவாதத்தைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளுங்கள்; உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

Story first published: Thursday, October 29, 2026, 12:25 [IST]
Desktop Bottom Promotion