கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kara Kozhukattai With Andhra Milagai Chutney Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரியான டிபன் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு எதுவும் இல்லையா? உப்புமா செய்யலாம் என்றால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிடிக்காதா? அப்படியானால் உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தால், அதைக் கொண்டு உப்புமா செய்யாமல், கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கார கொழுக்கட்டைக்கு ஆந்திரா மிளகாய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இப்படி செய்யும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Kara Kozhukattai With Andhra Milagai Chutney How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு இந்த கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சட்னிக்கு..

ஊற வைப்பதற்கு...

* வரமிளகாய் - 25 (விதைகளை நீக்கியது)
* புளிப்பான தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ஊற வைத்த மிளகாய்

சட்னி தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4
* உளுத்தம் பருப்பு - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த சட்னி
* தண்ணீர் - சிறிது

அரைப்பதற்கு...

* வரமிளகாய் - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)

கொழுக்கட்டை தாளிப்பதற்கு..

* கோதுமை ரவை - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த பருப்பு விழுது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த கோதுமை ரவை
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் விதைகளை நீக்கிய வரமிளகாயை புளித்த தயிருடன் சேர்த்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி மற்றும் சீரகத்தை சேர்த்து வறத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊற வைத்த மிளகாயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ஆந்திரா மிளகாய் சட்னி தயார்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்த கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, நீர் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த பருப்பு விழுதை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி, 2 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* பிறகு கோதுமை ரவை ஓரளவு சூடாக இருக்கும் போதே, அவற்றை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கார கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 30, 2026, 7:11 [IST]
Desktop Bottom Promotion