இட்லி, தோசைக்கு தக்காளி சேர்க்காம இப்படி கார சட்னி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்...

Posted By:

Kara Chutney In Tamil: பொதுவாக கார சட்னி என்றால் வெங்காயம், தக்காளி, வரமிளகாய் சேர்த்து தான் செய்வோம். ஆனால் அந்த கார சட்னியையே பலவாறு செய்யலாம். அதுவும் தக்காளி சேர்க்காமல் கார சட்னியை செய்யும் போது, அந்த சட்னியை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மேலும் இந்த கார சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

அதோடு இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், அடுத்தமுறை கார சட்னியை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இதனால் ஒரு வாரம் சட்னி பிரச்சனையே இருக்காது.

Kara Chutney How To Make a Tasty Kara Chutney Without Tomato

உங்களுக்கு தக்காளி சேர்க்காமல் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 10
* சுடுநீர்

வதக்குவதற்கு..

* எண்ணெய் - 1/2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 1 கைப்பிடி
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, அத்துடன் வரமிளகாயையும் சேர்த்து, சுடுநீரை ஊற்றி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து நிறம் மாற வறுத்து இறக்கி, அதே சூட்டில் வெந்தயத்தை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 கைப்பிடி பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த புளி மற்றும் வரமிளகாயை நீருடன் அப்படியே ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 26, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion