மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.!

Posted By:

Kalyana Veetu Rasam Recipe In Tamil: பொதுவாக கோடைக்காலம் வந்தாலே சமைக்கவும் பிடிக்காது, சாப்பிடவும் பிடிக்காது. சொல்லப்போனால் இந்த காலத்தில் பெரும்பாலும் சட்டென்று சமைக்கக்கூடிய ரெசிபிக்களைத் தான் செய்வோம். சிலர் தங்கள் வீடுகளில் ரசம் வைத்து சமையலை முடித்துவிடுவார்கள்.

ரசத்தில் தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் என்று பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் என்ன தான் வீட்டில் பார்த்துபார்த்து ரசம் வைத்தாலும், கல்யாண வீட்டு ரசம் சுவைக்கு இருக்காது. இப்படி கல்யாண வீட்டு ரசம் மட்டும் சுவையாக இருப்பதன் ரகசியம், அதை செய்யும் பக்குவமும், அதில் சேர்க்கப்படும் பொருட்களும் தான். இந்த ரசத்தை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், வேறு எதுவும் கேட்காமல், இதை மட்டும் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.

Kalyana Veetu Rasam How To Make Kalyana Veetu Rasam Recipe

இந்த கல்யாண வீட்டு ரசத்தை எப்படி செய்வதென்று காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அந்த கல்யாண வீட்டு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 7 பல்

ரசத்திற்கு...

* புளி - 1 எலுமிச்சை அளவு
* தக்காளி - 3 (2 அரைத்தது+ 1 நறுக்கியது)
* துவரம் பருப்பு - 2 ஸ்பூன் (வேக வைத்து அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1/4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்கவேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை எடுத்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி வேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் வேக வைத்து அரைத்த துவரம் பருப்பை சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, வெல்லம், கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி விட வேண்டும்.
* ரசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கிளறினால், மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 9, 2026, 13:58 [IST]
Desktop Bottom Promotion