கொண்டைக்கடலையை வைச்சு சப்பாத்திக்கு இந்த மாதிரி குருமா செய்யுங்க... மட்டன் குருமா மாதிரியே இருக்கும்...!

Posted By:

Hotel Style Chana Masala Gravy Recipe in Tamil: இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீடுகளில் அதிகம் இரவு நேரத்தில் சமைக்கப்படும் உணவென்றால் அது சப்பாத்திதான், சில சமயங்களில் பூரி செய்வார்கள். அப்படி சப்பாத்தி, பூரி செய்யும்போது பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலாதான் சைடிஷாக இருக்கும். ஆனால் அது நிச்சயம் நாளடைவில் போரடித்து விடும்.

உருளைக்கிழங்கு மசாலா போரடிக்கும் போது புதிய சைடிஷை செய்ய வேண்டியது அவசியம். அப்படி புதிய சைடிஷ் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு கொண்டைக்கடலை குருமா சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கொண்டைக்கடலை குருமா சாப்பிடுவதற்கு மட்டன் குருமா போலவே இருக்கும். இந்த கொண்டைக்கடலை குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் மட்டன் குருமா சுவையில் எப்படி சுண்டல் குருமா செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Hotel Style Chana Masala Gravy Recipe How to Prepare Chana Masala Gravy
தேவையான பொருட்கள்:

- வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/ 2 ஸ்பூன்
- மட்டன் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி - சிறிதளவு
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு

அரைக்க:

- தேங்காய் துருவல் - அரை கப்
- முந்திரிப்பருப்பு - 10

தாளிக்க:

- எண்ணெய் - 3 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2

செய்முறை:

- கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

- இதை இரவு உணவுக்கு தயார் செய்கிறீர்கள் என்றால் காலையிலேயே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிப்பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும், அதேபோல் பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும்.

- தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கியா வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

- தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மட்டன் மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.

- பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கூடுதல் சுவைக்கு கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகபடுத்தலாம்.

- மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்

- குருமா கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கசூரி மேத்தி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

- சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி. அனைத்து டிபன்களுக்கும் இது சூப்பரான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 31, 2025, 14:35 [IST]
Desktop Bottom Promotion