செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும்

Posted By:

Chettinad Murungai Keerai Kollu Kuzhambu Recipe in Tamil: கீரைகளின் ராஜா என்றால் அது முருங்கைக்கீரைதான். பொதுவாகவே கீரை என்றால் ஆரோக்கியமான ஒன்றுதான், அதிலும் முருங்கைக்கீரை என்றால் அது கூடுதல் ஸ்பெஷலானதுதான். ஏனெனில் முருங்கைக்கீரையில் அதிகளவு இரும்புச்சத்துக்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது, எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Healthy Recipes Chettinad Murungai Keerai Kollu Kuzhambu Recipe

பொதுவாக முருங்கைக்கீரையை பொரியல் செய்துதான் சாப்பிடுவோம், ஆனால் முருங்கைக்கீரையை கொள்ளுடன் சேர்த்து ஒரு சுவையான குழம்பு மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான குழம்பு வைக்கலாம். முருங்கைக்கீரை, கொள்ளு இரண்டுமே ஆரோக்கியமானவை, இவை இரண்டையும் சேர்த்து ஒரு குழம்பு வைக்கும் போது அது வேற லெவலில் இருக்கும். முக்கியமாக எடையைக் குறைப்பவர்களுக்கு இதைவிட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. இது செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும்.

உங்களுக்கு செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
முருங்கைக்கீரை - 2 கப்
புளி - எலுமிச்சை பழம் அளவு (தேவைக்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
சாம்பார் தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
முழு மிளகு - 1 டீ ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்தது)
பெருங்காயத் தூள் - ¼ டீ ஸ்பூன்
பூண்டு - 2
வெல்லம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து (கிள்ளி வைத்தது)

செய்முறை:

- கொள்ளை குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஊற வைத்து எடுத்து கொள்ளவும். இதனால் பருப்பு விரைவாக வேகவும், மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

- முருங்கை கீரையை உருவி பழுத்த இலைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் சேர்க்கவும். பின் மேற்பரப்பில் இருக்கும் கீரைகளை மண் இல்லாமல் அலசி எடுத்து பொடியாக நறுக்கவும்.

- புளியின் மேற்பகுதியில் இருக்கும் ஓடு மற்றும் தூசி நீங்க அலசி விட்டு, பின் மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் புளியை நன்கு கரைத்து வடித்து புளிக்கரைசல் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டு இரண்டாக நறுக்கி கொள்ளவும். பூண்டை இடித்து வைக்கவும்.

- நன்கு பழுத்த தக்காளியை கழுவி விட்டு பச்சை நிற காம்பு பகுதியை நீக்கவும். பின் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கருவேப்பிலையை கழுவி விட்டு ஒன்றிரண்டாக கிள்ளி வைக்கவும்.

- மிளகை மிக்ஸி அல்லது இடி கல்லில் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தையும் நன்றாக இடித்து எடுக்கவும். இதனால் வெல்லம்
சீக்கிரம் கரையும்.

- குக்கரை அடுப்பில் வைத்து கழுவி நறுக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்க்கவும். சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வைக்கவும்.

- பிரஷர் அடங்கியதும் குக்கரை நீக்கி கீரையை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். பின் அதே குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், ஊற வைத்த கொள்ளை நீரை வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்.

- அதில் நறுக்கி வைத்த தக்காளி, கரைத்து வைத்த புளிக்கரைசல், சாம்பார் தூள், மஞ்சள் தூள், ஒன்றிரண்டாக இடித்த மிளகு, பெருங்காயம், இடித்து வைத்த பூண்டு, மற்றும் வெல்லம் சேர்க்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

- பின் குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். பின் மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேக விடவும். கொள்ளு வேக எப்போதும் சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்பதால் நன்கு வேகும் வரை வேக விடவும். பின் விசில் தானாக அடங்கும் வரை காத்திருக்கவும்.

- குக்கரை திறந்து வேக வைத்த கீரையை சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இந்த குழம்பு கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். இல்லை கெட்டியாக வேண்டும் என்றால் சற்று கூடுதல் நேரம் கொதிக்க விடவும்.

- தாளிப்பு கரண்டி அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து பொரிந்ததும் வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். வெந்தயம் சிவந்ததும் இதை குழம்புடன் சேர்த்து கிளறவும்.

- பின் உப்பு, புளி மற்றும் காரம் சரிபார்த்து, அடுப்பை அணைத்தால் சுவையான முருங்கை கீரை கொள்ளு குழம்பு ரெடி!

- இந்த முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு, சூடான சாதம், முட்டைக்கோஸ் பொரியல் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

- இதில் இருக்கும் கொள்ளு மற்றும் முருங்கை கீரை உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு உடல் எடை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

[ of 5 - Users]
Story first published: Friday, October 30, 2026, 13:06 [IST]
Desktop Bottom Promotion