இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்

Posted By:

Groundnut Katli Recipe in Tamil: இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்தலான ஒரு ஸ்வீட் செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் காஸ்ட்லியான காஜூ கட்லியை கொஞ்சம் வித்தியாசமாக நிலக்கடலையை வைத்து உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள். இந்த வேர்க்கடலை கட்லி மிகவும் வித்தியாசமானது மற்றும் சுவையானது.

Groundnut Katli Recipe How to Make at Home in Tamil

காஜு கட்லியை கஜு பர்ஃபி என்றும் அழைப்பர். ஆனால், கெட்டியான பர்ஃபி போலல்லாமல், காஜு கட்லி மெல்லியதாக இருக்க வேண்டும். உண்மையில் 'கட்லி' என்ற வார்த்தைக்கு 'மெல்லிய துண்டுகள்' என்று பொருள்.​​வீட்டிலேயே கட்லி செய்வது எளிதுதான். அதிலும் வேர்க்கடலையில் செய்வது மிகவும் எளிதானது.

உங்களுக்கு வேர்க்கடலையை வைத்து சூப்பரான கட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலை கட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

- வேர்க்கடலை - 2 கப்
- பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 3
- சர்க்கரை - 1 கப்
- தண்ணீர் - ½ கப்
- நெய் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலையை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல், தோல் தனியாக பிரிந்து வரும் வரை வறுக்கவும்.

- பின் அதை ஒரு அகலமான தட்டில் சேர்த்து ஆற விடவும். நன்கு ஆறியதும் வேர்க்கடலையை தேய்த்து தோலை நீக்கவும். பின் கைகளால் தோல் இல்லாமல் பிரித்தாலும் சரி, அல்லது முறத்தில் சேர்த்து புடைத்து எடுத்து கொள்ளவும்.

- ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சிறிது சிறிதாக சேர்த்து பல்ஸ் மோடில் விட்டு விட்டு அரைக்கவும். இல்லையென்றால் கடலையில் இருந்து எண்ணெய் பிரிந்து பசை போல் மாறிவிடும்.

- நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். இல்லையென்றால் உரலில் சேர்த்தும் இடித்து பொடி செய்து கொள்ளலாம். பின் சல்லடையில் சேர்த்து நன்றாக பொடியாக கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.

- மீண்டும் மிக்ஸி ஜாரில் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும். பின் பால் பவுடர் மற்றும் அரைத்து வைத்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியையும் சல்லடையில் சேர்த்து சலித்து எடுத்து கொள்ளவும்.

- எல்லா பொருட்களும் ஒன்றோடு ஒன்றாக கலங்கும் படி நன்கு கிளறவும். இதில் பால் பவுடர் நல்ல மென்மையான பதத்தையும், ஏலக்காய் நல்ல வாசனையையும் கொடுக்கும்.

- அடிகனமான வாணலி அல்லது பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, அதனுடன் சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். (சுமார் ½ கப் அளவு தண்ணீர்). அது நன்றாக கொதித்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதனுடன் அரைத்து சலித்த வைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதம் வரும் வரை தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும்.

- அதனுடன் 1 டீ ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும். அடிப்பிடிக்காமல் இருக்கும் படி கிளறி விட வேண்டும். மென்மையான பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால், கலவை கடினமாகி விடும்.

- பின் நெய் தடவிய பட்டர் பேப்பரில் இந்த கலவையை சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறி விட்டு, பட்டர் பேப்பரை வைத்தே இந்த கலவையை அழுத்தி மென்மையாக்கி கொள்ளவும்.

- நன்கு மென்மையாக மாவு பதத்திற்கு வந்ததும், மென்மையாக பிசைந்து கொள்ளவும்.பின் மாவை சப்பாத்தி கட்டையால் ஒரே அளவில் இருக்கும் படி சற்று தடிமனாக தேய்த்து கொள்ளவும்.

- உங்களுக்கு வேண்டும் என்றால் மேலே வெள்ளி தகடு பேப்பர் ஒட்டி கொள்ளலாம். பின் உங்கள் விருப்பத்திற்கு டைமன்ட் வடிவத்திலோ அல்லது நீங்கள் விரும்பும் வடிவிலோ வெட்டி எடுத்தால் சுவையான வேர்க்கடலை கட்லி ரெடி!

- கடைசியாக இந்த கட்டிலியை காற்று போகாத டப்பா அல்லது பாட்டிலில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டு போகாது.

[ of 5 - Users]
Story first published: Monday, November 2, 2026, 19:39 [IST]
Desktop Bottom Promotion