கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Gothumai Dosa With Poondu Kara Chutney Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை சுட மாவு வேறு இல்லையா? வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு கோதுமை தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பூண்டு கார சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களும், பேச்சுலர்களும் இந்த டிபன் காம்போவை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கைகொடுக்கும்.

Gothumai Dosa With Poondu Kara Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு இந்த கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை, பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூண்டு கார சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பூண்டு - 1 கைப்பிடி
* சின்ன வெங்காயம் - 10
* சின்ன தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கோதுமை தோசைக்கு...

* கோதுமை மாவு - 1 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கோதுமை தோசை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாயை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், பூண்டு கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 10, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion