இதுவரை கோதுமை ரவையை வெச்சு உப்புமா செஞ்சிருப்பீங்க.. இன்னிக்கு பாயாசம் செய்யுங்க.. அள்ளும்..

Posted By:

Godhuma Rava Payasam Recipe: பொதுவாக பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் வீட்டில் வடை பாயாசத்துடன் ஒரு பெரிய விருந்தை தயாரித்து சாப்பிடுவது வழக்கம். அப்படி பாயாசம் செய்யும் போது, நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான பாயாசத்தை தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?

அப்படியானால் இன்று அந்த கோதுமை ரவையைக் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த கோதுமை ரவை பாயாசம் செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் ருசியாக இருக்கும்.

Godhuma Rava Payasam Recipe

உங்களுக்கு கோதுமை ரவை பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* கோதுமை ரவை - 1/2 கப்
* ஜவ்வரிசி - 1/4 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* வெல்லம் - 1 கப் (துருவியது)
* தேங்காய் பால் - 2 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையை சேர்த்து 2 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை எடுத்து, அதில் இந்த வறுத்த கோதுமை ரவையை சேர்த்து, அத்துடன் ஜவ்வரிசி மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* அதன் பின் குக்கரில் வேக வைத்துள்ளதை ஒரு வாணலியில் ஊற்றி, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, 5-10 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு தேங்காய் பாலை ஊற்றி கிளறி, சில நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேக வைத்து, ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதை அப்படியே பாயாசத்தில் சேர்த்து கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Monday, October 23, 2023, 15:45 [IST]
Desktop Bottom Promotion