வீட்டில் தோசை மாவு இல்லையா? அப்ப இந்த உடனடி மாவை செஞ்சு வைச்சுக்கோங்க - யூஸ் ஆகும்

Posted By:

இன்று இருக்கும் அவசர உலகில் நாம் சமைப்பதற்கு தினசரி நேரம் ஒதுக்குவதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் உறவினர் வீடுகளுக்கு சில நாட்கள் சென்று வந்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மறுநாள் சமைப்பதே பெரிய பிரச்சனையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் உடனடியாக கடைக்கு சென்று இட்லி மாவு வாங்கி வருவோம்.

Dosa Recipe How to Prepare Instant Dosa and Chutney Recipe in Tamil

அவை சில நேரங்களில் அது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவற்றை தவிர்க்க உங்கள் வீட்டில் இது போன்ற ப்ரீ மிக்ஸ்களை செய்து வைத்து கொண்டால் தக்க சமயத்தில் உதவியாக இருக்கும். இங்கு எப்படி இன்ஸ்டன்ட் தோசை மற்றும் நிலக்கடலை சட்னி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தோசை ப்ரீ மிக்ஸ்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
முழு உளுந்து - ½ கப்
மாவு ஜவ்வரிசி - ¼ கப்
வெள்ளை அவல் - ¾ கப்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- இட்லி அரிசியை இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும்.
- தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, சுத்தமான வெள்ளை துணியின் மீது நன்றாக பரப்பிவிடவும்.
- அதை மின்விசிறிக்கு அடியிலோ அல்லது வெயிலிலோ ஈரப்பதம் இல்லாமல் நன்றாக உலர வைக்கவும்.
- அதே போல் உளுந்தையும் நன்றாக அலசி காயவிடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் உளுந்து சேர்த்து நிறம் மாறாமல் வறுக்கவும்.
- அதனுடன் மாவு ஜவ்வரிசி மற்றும் வெள்ளை அவல் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து ஆற விடவும்.
- அதே போல் அரிசியையும் சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்து ஆற வைக்கவும்.
- அரிசி நன்றாக ஆறியதும் உலர்வான மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அடுத்து வறுத்து வைத்த பொருட்களை தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் வெந்தயம் சேர்த்து குருனை இல்லாமல் நன்றாக மாவாக அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
- இப்போது அரைத்த அரிசிமாவு மற்றும் உளுந்து மாவை நன்றாக கலந்து ஈரம் இல்லாத மற்றும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமிக்கவும்.
- தேவைப்படும் போது முதல் நாள் இரவே இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து புளிக்க வைத்தால் இன்ஸ்டன்ட் தோசை மாவு ரெடி!

நிலக்கடலை சட்னி ப்ரீ மிக்ஸ்

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைக்க:
நிலக்கடலை - ¼ கப்
பொட்டுக்கடலை - ½ கப்
வரமிளகாய் - 4
பூண்டு - 4 பல்
கொப்பரை தேங்காய் பவுடர் - ½ கப்
தனியா விதை - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

- நிலக்கடலையை வறுத்து ஆற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
- பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் பவுடர், தனியா விதை, கருவேப்பிலை, புளி மற்றும் உப்பை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
- நன்றாக ஆறியதும் உலர்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் நாம் அரைத்த பொடியை சேர்த்து கிளறி ஆற வைத்து காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.
- தேவைப்படும் நேரத்தில் தேவையான அளவு எடுத்து சுடுதண்ணீர் சேர்த்து கலந்தால் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion