தீபாவளி ஸ்பெஷல் செட்டிநாடு சீப்பு சீடை - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Diwali Special Chettinad Seepu Seedai Recipe In Tamil: இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலான பலகாரம் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு சீப்பு சீடை அல்லது சீப்பு முறுக்கை செய்து கொடுங்கள். இந்த சீப்பு முறுக்கு தேங்காய் பால் சேர்த்து செய்வதால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இதை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு சீப்பு சீடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சீப்பு சீடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Diwali Special Recipe How To Make a Chettinad Seepu Seedai

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* இடியாப்ப மாவு/கொழுக்கட்டை மாவு - 2 கப்
* துருவிய தேங்காய் - 1 1/4 கப்
* வெதுவெதுப்பான நீர் - 3/4 கப் + 1 கப்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, லேசாக நிறம் மாற வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் உளுத்தம் பருப்பை சேர்த்து, நன்கு நைஸாக அரைத்து, சல்லடை பயன்படுத்தி சலித்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் பாசிப்பருப்பை சேர்த்து, அதையும் நன்கு நைஸாக அரைத்து, சல்லடை பயன்படுத்தி சலித்து, மற்றொரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் 2 கப் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1/2 கப் உளுத்தம் பருப்பு மாவு மற்றும் 1/4 கப் பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இப்போது முறுக்கு மாவு தயார்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து, 3/4 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காயை வடிகட்டி, முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 3/4 கப் தேங்காய் பாலை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, தேங்காய் பாலை தொடர்ந்து கிளறி விட்டு சூடேற்ற வேண்டும். பாலானது கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு கலந்து வைத்துள்ள முறுக்கு மாவை எடுத்து, அத்துடன் தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைய வேண்டும்.
* பின் கூடுதலாக 3/4 கப் முதல் 1 கப் வரை நீரை சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் நன்கு சூடான எண்ணெயை 2-3 டேபிள் ஸ்பூன் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து முறுக்கு உழக்கை எடுத்து, அதில் சீப்பு முறுக்கு அச்சை வைத்துக் கொள்ள வேண்டும். பின் முறுக்கு மாவை உள்ளே வைத்து, ஒரு தட்டில் நீளமாக பிழிந்து கொள்ள வேண்டும்.
* பின் பிழிந்த மாவை ஒரு கத்தி பயன்படுத்தி 1 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் எடுத்து, சீப்பு சீடை அல்லது சீப்பு முறுக்கு வடிவில் உருட்டி முனைப் பகுதியை ஒன்றிணைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து எண்ணெய் நன்கு சூடானதும், ஒரே சூட்டில் அனைத்து சீப்பு சீடைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு சீப்பு சீடை அல்லது சீப்பு முறுக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 11, 2025, 18:34 [IST]
Desktop Bottom Promotion