1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Thengai Adhirasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் சீக்கிரம் தீர்ந்துவிடுகிறதா? 10 நாட்கள் ஆனாலும் வைத்து சாப்பிடக்கூடிய அளவில் ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அதிரசம் என்றால் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் தேங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த தேங்காயைக் கொண்டு அதிரசம் செய்யுங்கள். இந்த தேங்காய் அதிரசத்தை ஒருமுறை செய்தால், 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த அதிரசம் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் மற்றும் பக்குவத்தில் அதிரசம் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும்.

Coconut Adhirasam How To Make Thengai Adhirasam Recipe

உங்களுக்கு இந்த தேங்காய் அதிரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் அதிரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாவு பச்சரிசி - 1 கிலோ
* வெல்லம் - 3/4 கிலோ (பொடித்தது)
* தண்ணீர் - 1/4 கப்
* தேங்காய் - 1/2 மூடி (அரைத்தது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்துக் கொண்டு நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 12 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை முழுமையாக வடிகட்டிவிட வேண்டும்.
* அதன் பின் அந்த அரிசியை ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி, நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின், சரியான பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பாகு பதம் பார்க்க, ஒரு தட்டில் நீரை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு துளி வெல்ல பாகுவை ஊற்றினால், அந்த வெல்லம் கையில் எடுக்க வர வேண்டும். அப்படி வந்துவிட்டால், சரியான பாகு பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.
* அதன் பின் அதில் அரைத்த அரை மூடி தேங்காயை சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவை நன்கு கட்டிகளின்றி கிளறிய பின், அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு குளிர்ந்த பின் மூடி வைத்து 1 நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* 1 நாள் ஆன பின், கையில் எண்ணெய் தடவி அந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, எண்ணெய் தடவிய ஒரு வாழை இலையின் மேல் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள அதிரசத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், தேங்காய் அதிரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 28, 2026, 17:20 [IST]
Desktop Bottom Promotion