குளிர்காலத்தில் கொள்ளு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சளி, தலை பாரம் தொல்லையே இருக்காது!

Posted By:

Kollu Sambar Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் உங்கள் வீட்டில் உள்ளோர் சளி, இருமல், தலைவலியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால், அந்த கொள்ளு பருப்பைக் கொண்டு சாம்பார் செய்து கொடுங்கள். இந்த கொள்ளு சாம்பார் மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இதை அடிக்கடி குளிர்காலத்தில் செய்து சாப்பிடும் போது, சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.

Kollu Sambar How To Make Horsegram Sambar Recipe

உங்களுக்கு இந்த கொள்ளு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* கொள்ளு - 60 கிராம்
* மல்லி விதை - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 8
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கொள்ளு பருப்பை நீரில் கழுவி, நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய கொள்ளு பருப்பை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் கொள்ளு பருப்பு மற்றும் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி, துருவிய தேங்காய் சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சத்தான மற்றும் சுவையான கொள்ளு சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 12, 2026, 14:44 [IST]
Desktop Bottom Promotion