செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Chettinad Vendaikkai Pachadi Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று புதுமையான சுவையில், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வெண்டைக்காயைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் பச்சடியை செய்யுங்கள்.

Chettinad Vendaikkai Pachadi How To Make Ladys Finger Pachadi Recipe

இந்த பச்சடி சூடான சாதத்துக்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியில் வெண்டைக்காய் வழுவழுவென்று இருக்காது. இதனால் வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்டைக்காய் - 300 கிராம் (மிதமான அளவில் நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து கரைத்தது)
* வேக வைத்த பருப்பு
* வதக்கிய வெண்டைக்காய்

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2-3 முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பருப்பில் 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு சுருள வேக வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயமும், பச்சை மிளகாயும் எண்ணெயில் நன்கு வதங்கி நிறம் மாறியதும், அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, அத்துடன் வேக வைத்த பருப்பையும் சேர்த்து, சிறிது நீரில் குக்கரில் ஊற்றி அலசி சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடி தயார்.

குறிப்பு: வெண்டைக்காய் வழுவழுவென்று இருக்கக்கூடாதெனில், முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி துடைத்துவிட்டு, 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பின் வெண்டைக்காயை நறுக்கி விட்டு, 1/2 மணிநேரம் கழித்து சமைத்தால், வெண்டைக்காயில் வழுவழுப்புத்தன்மை இருக்காது.

[ of 5 - Users]
Story first published: Monday, November 16, 2026, 13:00 [IST]
Desktop Bottom Promotion