மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்!

Heart Blockage Symptoms In Tamil: மாரடைப்பு என்றாலே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, இடது கை அல்லது தோள்பட்டை வலிக்கும் என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால், உண்மை என்னவென்றால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். குறிப்பாக பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பே அசாதாரணமான சோர்வு, தூக்கமின்மை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது.

Doctor Shares 7 Early Warning Signs Of Blocked Blood Vessels Don t Ignore These Symptoms

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மாரடைப்பு ஏற்பட்ட பெண்களில் 95 சதவீதத்தினருக்கு அதற்கு முன்பே ஏதாவது ஒரு அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கவனிக்க வேண்டிய இதய பாதிப்பின் 7 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த அறிகுறிகள் என்னவென்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1. இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது

"தலைமுடி நரைப்பதற்கு முக்கிய காரணம் பரம்பரை மற்றும் வயது முதிர்வு என்றாலும், சில ஆய்வுகள் இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதற்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress), வீக்கம் போன்ற மாற்றங்கள் தலைமுடியின் நிறத்தையும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இருப்பினும், நரைமுடி இருப்பதால் இதய அடைப்பு இருக்கிறது என்று அர்த்தமல்ல. இதனுடன் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் இருந்தால் இதயப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது." என்று டாக்டர் கூறினார்.

2. காதுக்குள் இதயத் துடிப்பு போன்ற சத்தம் கேட்பது

"காதுக்குள் இதயத் துடிப்பின் தாளத்திற்கு ஏற்ப 'உஷ் உஷ்' என்ற சத்தம் கேட்பதை பல்சடைல் டின்னிடஸ் (Pulsatile Tinnitus) என்கிறார்கள். காதுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மாறுவதால் இத்தகைய சத்தம் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, தைராய்டு பிரச்சனை மற்றும் இரத்த நாள பாதிப்புகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக புதிதாக ஒரே காதில் மட்டும் இதுபோன்ற சத்தம் தொடர்ந்து கேட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.

3. காது மடலில் சாய்வான கோடு

"காது மடலில் சுமார் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக ஆழமான மடிப்பு காணப்படுவதை ஃபிராங்க்ஸ் சைன் (Frank's Sign) என்கிறார்கள். சில ஆய்வுகளில் இந்த மடிப்பு இருப்பவர்களுக்கு இதய இரத்த நாள பாதிப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காதுப் பகுதியில் உள்ள சிறிய இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடலின் மற்ற இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்தக் கோடு மட்டும் இதய நோயை உறுதிப்படுத்தாது." என்று டாக்டர் கூறினார்.

4. நடக்கும்போது கால் வலி ஏற்படுவது

"சிறிது தூரம் நடந்தாலே கெண்டைக்காலில் வலி, பிடிப்பு அல்லது இறுக்கம் ஏற்பட்டு, ஓய்வெடுத்ததும் வலி குறைகிறதா? இதை கவனிக்க வேண்டும். இதற்கு கிளாடிகேஷன் (Claudication) என்று பெயர். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது தசைகளுக்குத் தேவையான அளவு இரத்தம் கிடைக்காமல் இப்பிரச்சனை உருவாகலாம். இதனை பெரிபரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease) என்கிறார்கள். கால்களில் இரத்த நாள பாதிப்பு இருப்பவர்களுக்கு இதயம் மற்றும் மூளை இரத்த நாளங்களிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.

5. பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண சோர்வு

"பெண்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் ஒன்று காரணமில்லாத அதிகப்படியான சோர்வு. வழக்கமாகச் செய்யும் வீட்டு வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு உடல் சோர்வாக இருப்பது, காலையிலேயே ஆற்றலின்றி உணர்வது, ஓய்வெடுத்தாலும் சோர்வு குறையாமல் இருப்பது போன்றவை எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

ஒரு ஆய்வில் மாரடைப்பு ஏற்பட்ட 515 பெண்களில் 71 சதவீதத்தினருக்கு அதற்கு முன்பாக அசாதாரணமான சோர்வு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 48 சதவீதத்தினருக்கு தூக்கப் பிரச்சனையும், 42 சதவீதத்தினருக்கு மூச்சுத்திணறலும் இருந்துள்ளன. எனவே, பெண்கள் இந்த அறிகுறிகளை சாதாரண சோர்வு என்று அலட்சியப்படுத்தக் கூடாது." என்று டாக்டர் கூறினார்.

6. கண் இமைகளில் மஞ்சள் நிறப் படிவுகள்

"கண் இமைகளின் உட்புறம், குறிப்பாக மூக்குக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் மென்மையான படிவுகள் காணப்படலாம். இதனை சாந்தெலாஸ்மா (Xanthelasma) என்கிறார்கள். இவை கொலஸ்ட்ரால் படிவுகளால் உருவாகக்கூடியவை. சில ஆய்வுகள் இந்தப் படிவுகளுக்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன. இத்தகைய மாற்றங்கள் தென்பட்டால் லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம்." என்று டாக்டர் கூறினார்.

7. ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு

"ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) சில நேரங்களில் இதய இரத்த நாள பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஆணுறுப்புக்குச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, உடலின் மற்ற இரத்த நாளங்களிலும் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, இந்தப் பிரச்சனை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்." என்று டாக்டர் கூறினார்.

மாரடைப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

"மேற்கண்ட அறிகுறிகள் அனைத்தும் மாரடைப்பை உறுதிப்படுத்தும் அறிகுறிகள் அல்ல. இவற்றில் சில சாதாரண உடல்நலப் பிரச்சனைகளாலும் ஏற்படலாம். இருப்பினும், தொடர்ந்து அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

- இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
- புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
- போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை: திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சில் அழுத்தம் அல்லது வலி, குளிர்வியர்வை, மயக்கம், குமட்டல் அல்லது கை, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். நெஞ்சு வலி இல்லாவிட்டாலும் மாரடைப்பு ஏற்படலாம். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இதை நினைவில் கொள்ள வேண்டும்." என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.

Story first published: Monday, November 16, 2026, 11:28 [IST]
Desktop Bottom Promotion