12 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் ரயில் எது தெரியுமா?

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்தியாவில் தினமும் 13,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை லட்சக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்கின்றன. 2024-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இந்திய ரயில்வே நெட்வொர்க் 68,584 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரவியுள்ளது. ஆனால், 12 மாநிலங்களைக் கடந்து செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

India s Longest Train That Covers 12 States

இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்

இந்தியாவின் பல பிரம்மாண்டமான ரயில்களில் அசாமின் திப்ருகாரையும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியையும் இணைக்கும் 'விவேக் எக்ஸ்பிரஸ்' பயணம் மிகவும் தனித்துவமானது. இதுவே இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் மற்றும் நீண்ட நேரம் பயணிக்கும் ரயில் பயணமாகும். இந்த ரயில் மொத்த பயணத்தை முடிக்க 75 மணிநேரமாகும். ஏனெனில் இது இந்தியாவின் 12 மாநிலங்களைக் கடந்து செல்கிறது. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் இந்த 'திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்', அதிகாரப்பூர்வ ரயில்வே பதிவுகளின்படி 4,100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடக்கிறது. இந்தப் பயணம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கி, தமிழ்நாட்டின் தெற்கு முனை வரை நீள்கிறது.

இந்த ரயில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், 2011-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனாலேயே சுவாமி விவேகானந்தரின் பெயரே இந்த ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் தகவல்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இதன் வழித்தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாட்டின் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு பகுதிகளை ஒன்றிணைக்கும் ஒரு குறியீட்டுப் பயணமாகவும் இது அமைகிறது.

12 மாநிலம் வழியாக செல்லும் ரயில்

இந்த நீண்ட வழித்தடத்தை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றுவது, பயணிகளுக்கு அது கொடுக்கும் பன்முகத்தன்மைதான். ஏறக்குறைய மூன்று நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில், ரயில் அசாம், நாகாலாந்து, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது செயல்பாட்டு வழித்தடங்கள் மற்றும் ரயில்வே மண்டலங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

பன்முகத்தன்மை நிறைந்த பயணம்

இந்த ரயிலில் முழு தூரமும் பயணிக்கும் பயணிகள், ரயிலை விட்டு இறங்காமலேயே இந்தியாவின் வித்தியாசமான புவியியல் அமைப்பு, உணவு, மொழி, காலநிலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும். அசாமின் தேயிலைத் தோட்டங்கள், கிழக்கு இந்தியாவின் நதி சமவெளிகள், கடற்கரை ஓரங்கள் எனப் பயணித்து, இறுதியாகத் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டை வந்தடைகிறது.

எத்தனை ரயில் நிலையங்கள் வழியே நிற்கிறது?

இந்திய ரயில்வேயின் தரவுகளின்படி, இந்தப் பயணத்தின் போது ரயில் 55-க்கும் மேற்பட்ட நிலையங்களில் நின்று செல்கிறது. கவுகாத்தி, நியூ ஜல்பைகுரி, புவனேஷ்வர், விஜயவாடா, சென்னை மற்றும் மதுரை ஆகியவை இந்த ரயில் நிற்கும் முக்கிய ரயில் நிலையங்களாகும். இது இந்தியா முழுவதையும் பார்ப்பதற்காண ஒரு அனுபவமாகும்.

தனித்துவமான ரயில்

இந்தியாவில் தற்போது பல புதிய, அதிவேக இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், 'விவேக் எக்ஸ்பிரஸ்' இந்திய இரயில்வே வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் வெறும் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், அது கொடுக்கும் அனுப்வவத்திற்காகவே இந்த ரயில் பயணிக்கின்றனர்.

Story first published: Sunday, November 15, 2026, 17:56 [IST]
Desktop Bottom Promotion