மீன் வாங்குனா ஒருடைம் பீச் ஸ்டைல் மீன் ப்ரையை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. நிச்சயம் பிடிக்கும்...

Posted By:

Beach Style Fish Fry Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான் அந்த விடுமுறையை கொண்டாடிய சந்தோஷம் கிடைக்கும். இன்று உங்கள் வீட்டில் மீன் வாங்கினால், அதை ப்ரை செய்ய நினைத்தால், வழக்கமாக செய்யும் மீன் ப்ரையை செய்யாமல், ஒருமுறை பீச் ஸ்டைலில் மீன் வறுவலை செய்து சாப்பிடுங்கள்.

இந்த பீச் ஸ்டைல் மீன் வறுவல் வழக்கமாக செய்வதை விட மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை செய்து சாப்பிட்டால், இனிமேல் இப்படி தான் செய்து சாப்பிட விரும்புவீர்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.

Beach Style Fish Fry How To Make a Beach Style Fish Fry Recipe

உங்களுக்கு பீச் ஸ்டைல் மீன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீச் ஸ்டைல் மீன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீன் - 1 கிலோ

அரைத்து பேஸ்ட் செய்வதற்கு...

* பூண்டு - 6 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 10
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய்

மசாலா பொடிக்கு...

* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் - 10
* அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சிறிது

செய்முறை:

* முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளிச்சாறு சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு கழுவி வைத்துள்ள மீனை எடுத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி, காஷ்மீரி மிளகாய், அரிசி சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள், தேங்காய், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொடியை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அரைத்து வைத்துள்ள பொடியில் பிரட்டி, தோசைக் கல்லில் போட்டு, முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான பீச் ஸ்டைல் மீன் ப்ரை தயார்.

Image Courtesy: Cook With Fem

[ of 5 - Users]
Story first published: Sunday, July 21, 2024, 11:29 [IST]
Desktop Bottom Promotion