உங்கள் குழந்தை மீண்டும் பள்ளிக்கு போறாங்களா? அப்ப அவங்களை ஜாலியா எப்படி தயார்படுத்துவது?

கோடை விடுமுறை முடிந்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு போகும் நாட்கள் வந்து விட்டது. இந்த கோடை விடுமுறையில் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக விளையாடி மகிழ்ந்து இருப்பார்கள். மீண்டும் பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கடுப்பான விஷயமாக இருக்கும்.

ஒரே வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் படிப்பது, தினசரி வீட்டுப்பாடம் என்பது அவர்களுக்கு சலிப்பை தரலாம். இதனால் நிறைய குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு போக அடம் பிடிக்கலாம். இது தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.

How To Get Your Child Emotionally Ready To Go Back To School In Tamil

எனவே உங்கள் குழந்தை மீண்டும் பள்ளிக்கு அடம் பிடிக்காமல் செல்ல நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் போது அவர்களை நீங்கள் எளிதாக உணர்வுப்பூர்வமாக தயார்படுத்தி விடலாம்.

உங்கள் குழந்தையிடம் உட்கார்ந்து பேசுங்கள்

உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்வது குறித்து அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். பள்ளிக்கு சென்று மீண்டும் உன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்ப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று எடுத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் மீண்டும் பள்ளிக்கு செல்வது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவரை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வழக்கமான உறக்க நேரத்தை கடைபிடியுங்கள்

கோடை விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தையின் படுக்கை நேரம் மாறியிருக்கலாம். ஆனால் பள்ளிக்கு செல்லும் போது வழக்கமான உறக்க நேரத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே பள்ளி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே குழந்தையின் படுக்கை நேரத்தை மாற்றி அமையுங்கள். உங்கள் குழந்தைகளிடம் இது குறித்து தெளிவாக பேசுங்கள்.

பள்ளிக் கதைகளை பேசுங்கள்

கதைகளைப் போல் எதுவுமே உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்காது. குழந்தைகள் எப்பொழுதும் உங்கள் கதைகளை கேட்க விரும்புகிறார்கள். எனவே குழந்தைகளின் பள்ளிகளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், வேடிக்கையான கதைகள் போன்றவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இது அவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்கும்.

அவர்களை ஷாப்பிங் அழைத்துச் செல்லுங்கள்

உங்கள் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு போவதற்கு தேவையான பள்ளிச் சீருடைகள், காலணிகள், பென்சில், இரப்பர், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் மற்றும் பேக் போன்ற பொருட்களை வாங்க அவர்களை ஷாப்பிங் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க அவர்களை உற்சாகப்படுத்தலாம். இது அவர்களை உற்சாகப்படுத்தும். புது பேக், புது சீருடையுடன் பள்ளிக்கு செல்ல அவர்கள் மிகவும் விரும்புவார்கள்.

கோடை விடுமுறை பாடங்களை செய்ய வையுங்கள்

பல பள்ளிகள் இப்பொழுது கோடை விடுமுறை நாட்களிலும் ஹோம் வொர்க்களை தருகிறார்கள். அந்த பாடங்களை கோடை விடுமுறை நாட்களில் அவ்வப்போது செய்து வைத்து விடுங்கள். மொத்தமாக பாடங்களை செய்யும் போது அது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ஹோம் வொர்க்களை சரியாக முடித்து விட்டால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.

உங்கள் குழந்தையை புரிந்து கொள்ளுங்கள்

பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கும் மன அழுத்தம் என்பது இருக்கும். எனவே சில குழந்தைகள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல கவலைப்படுவார்கள். எனவே குழந்தைகளின் உடல் நிலையை மட்டுமல்ல குழந்தையின் மன நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். குழந்தை மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்ல அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அதன் படி பெற்றோர்கள் செயல்படுவது அவசியம்.

ஆரோக்கியமான உணவை அளியுங்கள்

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படும் போது அவர்கள் சரியான உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதுவே அவர்களின் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கோடை விடுமுறை நாட்களிலும் ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு அளியுங்கள். குழந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

Story first published: Sunday, June 18, 2023, 13:00 [IST]
Desktop Bottom Promotion