100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா இவங்க மட்டன் மட்டும் நல்லா சாப்பிடுவாங்க

கிராமங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காலையில் சேவல் கூவும் சத்தம்தான். கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் அனைவரும் கோழிகளை வளர்ப்பார்கள். மேலும் விருந்தாளிகள் வந்தாலோ அல்லது பண்டிகைகள் வந்தாலோ கோழியை அடித்துதான் குழம்பு வைப்பார்கள். ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறது.

Bizarre South Indian Village Where People Avoid Chicken and Eggs

இந்தக் கிராம மக்கள் கோழிகளை வளர்ப்பதில்லை, கோழி இறைச்சியை உண்பதில்லை அவ்வளவு ஏன் முட்டைகளைக் கூட வேகவைத்துக் கூட சாப்பிடுவதில்லை. இது இன்றோ, நேற்றோ தொடங்கிய வழக்கம் அல்ல, சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராம மக்கள் இந்த கடினமான வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 'தம்மைய்யதொட்டி' எனும் கிராமமே இந்த தனித்துவமான இடமாகும். இந்த மரபு எப்படித் தொடங்கியது மற்றும் அவர்கள் ஏன் அவர்கள் கோழிகளை வளர்ப்பைதையும், சாப்பிடுவதையும் தடை செய்துள்ளார்கள் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தம்மைய்யதொட்டி கிராமம் எங்கே உள்ளது?

தம்மைய்யதொட்டி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குந்தூர்பி பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்தக் கிராமத்தில், சுமார் 100 முதல் 150 வீடுகளில் ஏறத்தாழ 450 பேர் மட்டுமே வசிக்கின்றனர். பொதுவாக, கிராமப்புற மக்கள் தங்கள் அன்றாட வருமானத்திற்காகக் கோழி வளர்ப்பைச் சார்ந்திருப்பார்கள். சிலர் முட்டைக்காகவும், மற்றவர்கள் இறைச்சிக்காகவும் கோழிகளை வளர்ப்பார்கள். ஆனால், தம்மைய்யதொட்டி கிராம மக்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கோழிகளை வளர்ப்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பதுடன், கோழி சார்ந்த எந்தவொரு பொருளையும் உண்பதில்லை.

இந்த பாரம்பரியம் எப்போது தொடங்கியது?

இந்த வித்தியாசமான பாரம்பரியம் குறித்து உள்ளூர்வாசிகள் இரண்டு வெவ்வேறு கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு நாட்டுப்புறக்கதையின் படி, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் தொடர்ச்சியான பேரழிவுகள் ஏற்பட்டன. துரதிர்ஷ்டத்தைத் தடுப்பதற்காக கிராமப் பெரியவர்கள் சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்தனர். கோழி வளர்ப்பதையும் முட்டைகளைச் சாப்பிடுவதையும் நிறுத்துவதாக அவர்கள் கிராம மக்கள் அனைவரையும் சபதம் எடுக்க வைத்தனர்.

மற்றொரு கதையின் படி, ஒருமுறை திருவிழாவின் போது சிலர் கோழி சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு குண்டர் கும்பல் கிராமத்தைத் தாக்கி கொள்ளையடித்தது. எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக கிராமப் பெரியவர்கள் கோழி வளர்ப்பைத் தடை செய்தனர். கிராம மக்கள் இன்றும் மூதாதையர்கள் விதித்த அந்த விதிமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

அசைவ உணவை முற்றிலும் தவிர்க்கிறார்களா?

அதுதான் இல்லை. இந்த கிராம மக்கள் மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் கோழி தொடர்பான உணவுகளை அறவேத் தொடுவதில்லை. இவ்வளவு ஏன், அரசு வழங்கும் மதிய உணவில் தரப்படும் முட்டைகளை, பள்ளிச் சிறுவர்கள் கூட உண்பதில்லை. இந்த கிராமத்திற்கு மணம் முடித்து வரும் மணப்பெண்கள் கூட இந்த வழக்கத்தையே பின்பற்றத் தொடங்குகின்றனர்.

தம்மய்யதொட்டி கிராமத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறைச்சி, மது மற்றும் புகையிலை என அனைத்தையும் முழுமையாகத் தவிர்க்கும் வேறுசில இந்தியக் கிராமங்களும் உள்ளன. இந்த கடுமையான பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் பெரும்பாலும் மத நம்பிக்கைகள், ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் உள்ளன.

மதுவைத் தவிர்க்கும் கிராமம்

அடிகுப்பா கிராமம் மற்றொரு சிறந்த உதாரணமாகும். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் பகுதிக்கு அருகில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. அடிகுப்பா கிராம மக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதில்லை. அதுமட்டுமின்றி மது அருந்துவதையும் அவர்கள் கடுமையாகத் தடை செய்துள்ளனர். இத்தகைய தனித்துவமான வழக்கம் சுமார் 400 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Desktop Bottom Promotion