Latest Updates
-
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
இந்தியாவிலேயே அதிக குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும் -
சனிபகவானால் டிசம்பர் 11 முதல் கஷ்டங்களை அனுபவிக்கபோகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் ரெசிபி - இந்த பக்குவத்துல பன்னீரை செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு செமையா இருக்கும்
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்!
Diabetes In Young People: "எனக்கு வயது 25 தான் ஆகிறது. எனக்கு எப்படி சர்க்கரை நோய் வர முடியும்?" - சென்னையில் உள்ள பல இளைஞர்களுக்கு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்று தெரியவரும் போது அதிர்ச்சியாக இருக்கலாம். சர்க்கரை நோய் என்பது வயதான பிறகுதான் வரும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.
ஆனால், தற்போது 20 மற்றும் 30 வயதுகளில் இருப்பவர்கள்கூட இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை (Prediabetes) அல்லது சர்க்கரை நோய் இருப்பதை அறிந்துகொள்கிறார்கள். சிலருக்கு, தாங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைக்கும் நிலையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனையின் போதுதான் இந்தப் பிரச்சினை தெரியவருகிறது.

இப்படி இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்பது குறித்து சென்னை க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர். பிரசன்னா கார்த்திக் எஸ் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு:
இளம் வயதிலேயே இரத்தச் சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது?
"இளம் வயதிலேயே இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணம், "அதிகமாகச் சர்க்கரை சாப்பிடுவது" மட்டுமல்ல. மரபியல், உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய பல காரணிகள் இணைந்து சர்க்கரை நோய் ஏற்படுவதற்குப் பங்களிக்கின்றன. நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு உடல் உழைப்பில் ஈடுபடுகிறோம், எப்படித் தூங்குகிறோம், அன்றாட வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறோம் என்பவை அனைத்தும் உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
1. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஓர் முக்கிய காரணம்
ஒரு வழக்கமான நாளை நினைத்துப் பாருங்கள். அலுவலகத்திலோ வகுப்பறையிலோ பல மணி நேரம் உட்கார்ந்திருப்பது, பயணம் செய்வது, வீட்டில் அமர்ந்திருப்பது, பின்னர் கைப்பேசி அல்லது மடிக்கணினியில் மேலும் நேரத்தைச் செலவிடுவது எனப் பலருடைய நாள் அமைகிறது. பல இளைஞர்களின் வாழ்க்கையில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வழக்கமான உடல் இயக்கத்தைக் குறைத்துவிட்டது.
தசைகளைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்கும் போது, அவை ஆற்றலைப் பெறுவதற்காகக் குறைந்த அளவு குளுக்கோஸையே (Glucose) பயன்படுத்துகின்றன. காலப்போக்கில், இன்சுலின் என்ற ஹார்மோனுக்குச் சரியாகப் பதிலளிக்கும் உடலின் திறன் குறையலாம். இந்த நிலை இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) என்று அழைக்கப்படுகிறது.
இது இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும், சிலருக்குப் பின்னாளில் டைப் 2 சர்க்கரை நோய் (Type 2 Diabetes) ஏற்படுவதற்கும் காரணமாகலாம். எனவே, உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைப்பதற்காக மட்டுமல்ல. இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும், தொடர்ந்து உடல் இயக்கத்தில் ஈடுபடுவது முக்கியம்.
2. இனிப்புகளைச் சாப்பிடுவது மட்டும் காரணமல்ல
அதிகமாக இனிப்புகளைச் சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் வருகிறது என்பது பொதுவான தவறான எண்ணம். ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அதிகமாகச் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உணவுகள் (Refined Carbohydrates), அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Highly Processed Foods) மற்றும் தேவைக்கு அதிகமான உணவு ஆகியவை உடலுக்குத் தேவையானதைவிட அதிக கலோரிகள் கிடைப்பதற்கும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் காரணமாகலாம். குறிப்பாக, உடல் இயக்கம் குறைவாக இருக்கும்போது இந்த ஆபத்து அதிகரிக்கலாம்.
இதற்காக அரிசி போன்ற பாரம்பரிய உணவுகளையோ, மாவுச்சத்து நிறைந்த உணவுகளையோ உணவில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உணவின் அளவு, அதன் தரம், உணவில் சரியான சமநிலை மற்றும் வழக்கமான உடல் இயக்கம் ஆகியவையே முக்கியம்.
3. உடல் எடையைக் கொண்டு சொல்ல முடியாது
"எனக்கு அதிக உடல் எடை இல்லை. எனவே, எனக்குப் பாதிப்பு வராது" - அப்படிச் சொல்ல முடியாது. ஒருவருடைய உடல் எடையை மட்டும் வைத்து அவரது உடல்நலத்தை முழுமையாகத் தீர்மானிக்க முடியாது.
வெளிப்படையாக அதிக உடல் எடை இல்லாதவர்களுக்குக்கூட வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது உள்ளிட்ட வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, இடுப்புச் சுற்றளவு, குடும்பத்தில் சர்க்கரை நோய் இருப்பது, இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவு மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் முக்கியமானவை. வெளித்தோற்றத்தில் ஒல்லியாக இருக்கும் இளைஞருக்குக்கூட கவனிக்க வேண்டிய வளர்சிதை மாற்ற ஆபத்துக் காரணிகள் இருக்கலாம்.
4. குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் கவனம் தேவை
வாழ்க்கை முறை மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கலாம். மரபியல் காரணிகள், உடலின் அமைப்பு மற்றும் இன்சுலின், குளுக்கோஸ் ஆகியவற்றை உடல் எவ்வாறு கையாள்கிறது என்பவையும் இதில் பங்கு வகிக்கலாம். எனவே, இளம் வயதினருக்குச் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படும்போது, "நீங்கள் அதிகமாகச் சர்க்கரை சாப்பிட்டிருப்பீர்கள்" என்று மட்டும் கூறுவது சரியான அணுகுமுறை அல்ல.
5. தூக்கமும் மன அழுத்தமும் முக்கியம்
நீண்ட நேரம் வேலை செய்வது, முறையற்ற தூக்கம் மற்றும் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பது ஆகியவையும் உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். போதிய தூக்கமின்மையும், நீண்டகால மன அழுத்தமும் பசி, உடல் இயக்கம் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடலின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும்.
ஏற்கனவே பிற ஆபத்துக் காரணிகளைக் கொண்ட இளைஞர்களுக்கு, அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இந்தப் பழக்கங்கள் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம்.
பலருக்குத் தெரியாமல் போகும் எச்சரிக்கை நிலை
"டைப் 2 சர்க்கரை நோய் பொதுவாக ஒரே நாளில் ஏற்படுவதில்லை. இரத்தச் சர்க்கரை அளவு படிப்படியாக இயல்பான நிலையிலிருந்து சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலைக்கு (Prediabetes) மாறலாம். சிலருக்கு, பின்னர் சர்க்கரை நோயாகவும் முன்னேறலாம். இந்த நிலையில் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இருக்காது. அதனால், இரத்தச் சர்க்கரை அளவு இயல்பான அளவைவிட அதிகமாக இருந்தாலும், ஒருவர் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணரலாம்.
எனவே, அளவுக்கு அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது காரணமின்றி உடல் எடையில் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் வரும் வரை காத்திருந்து இரத்தச் சர்க்கரையைப் பரிசோதிப்பது, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பைத் தவறவிடச் செய்யலாம்." என்று டாக்டர் கூறினார்.
இளம் வயதினர் என்ன செய்யலாம்?
"உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒருபோதும் வயது தடையல்ல. தொடர்ந்து உடல் இயக்கத்தில் (உடற்பயிற்சி) ஈடுபடுவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை இடையிடையே தவிர்ப்பது, ஆரோக்கியமான உடல் எடை மற்றும் இடுப்புச் சுற்றளவைப் பராமரிப்பது, சமச்சீரான உணவைத் தேர்ந்தெடுப்பது, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது, போதுமான நேரம் தூங்குவது ஆகியவை இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும்.
இளம் வயதில் இருப்பதால் எந்தப் பாதிப்பும் வராது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அதே நேரத்தில், ஒருமுறை இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது மட்டுமே ஒருவருக்குச் சர்க்கரை நோய் இருப்பதை உறுதிப்படுத்தாது. சரியான பரிசோதனைகளும் மருத்துவ மதிப்பீடும் மேற்கொண்ட பிறகே நோயைக் கண்டறிய வேண்டும்.
குடும்பத்தில் சர்க்கரை நோய் இருப்பது, வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு, உடல் இயக்கமின்மை அல்லது பிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் போன்ற ஆபத்துக் காரணிகளைக் கொண்ட இளைஞர்கள், தங்களுக்கு இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை தேவையா என்பதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
நினைவில் கொள்ள வேண்டியவைகள்
"சர்க்கரை நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோய் அல்ல. அதேபோல், இனிப்புகளைச் சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படும் நோயும் அல்ல. இன்றைய இளைஞர்களிடம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உணவுப் பழக்கங்கள், போதிய உடல் இயக்கமின்மை, முறையற்ற தூக்கம், மன அழுத்தம், குடும்பப் பின்னணி மற்றும் பிற வளர்சிதை மாற்றக் காரணிகள் ஆகியவை இணைந்து, இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
உங்கள் வயது இளமையாக இருக்கலாம். ஆனால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காமல், இரத்தச் சர்க்கரை அளவை அலட்சியப்படுத்தாதீர்கள்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications




