For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!

By Mayura Akilan
|

Child
குழந்தைகளின் மூளை வளர்ச்சியானது முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி நியூரான்கள் மூளைக்குள் உருவாகின்றன. இந்த நியூரான்களே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். எனவே பெற்றோர்கள்தான் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல நிபுணர்கள்.

கோடி நியூரான்கள்

நம் பிஞ்சுக் குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் உருவாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரான்கள் - உருவாகின்றன. நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் நியூரான்கள் என்ற வேகத்தில் உருவாகி கோடிக்கணக்கில் கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப்பட்டவை.

வெள்ளைக் காகிதம்

பிறந்த குழந்தையில் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". வெள்ளைக் காகிதம் போல இருக்கும் முளையானது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, என்று அனைத்தையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.

நியூரான்களின் பதிவுகள்

குழந்தைகள் கண்களால் காணும், காதுகளால் கேட்கின்ற எதுவும், அவர்களின் மூளையில் பதிகின்றன.

தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது "புதிய" மூளையில் பதிந்து அவர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. பெரியவர்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் குழந்தைகள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அவர்கள் தாங்கள் புரிந்து கொண்டவற்றை நியூரான்களின் கோர்வைகளிலே சேமிக்கிறார்கள்.

குழந்தைகளாக மாறுங்கள்

குழந்தைகளின் ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எந்த அளவிற்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும்.

உன்னிப்பாக கவனிக்கும்

பத்துமாத குழந்தை பெற்றோர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்கிறது. ஒவ்வொரு செயல்பாடுகளையும் குழந்தைகள் மிக உன்னிப்பாக கவனித்து தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர வளர, எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் அவ்வாறே குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் செய்வதைப் போல தானும் செய்ய முயற்சிக்கிறது.

உணர்ச்சிகள் உணரும்

குழந்தைகள் ஒரு வயது முதல் ஒன்றரை வயதில் கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள்.

இவ்வயதுக் குழந்தைகள் எந்தச் சிக்கலான செயலையும் சிறு சிறு செயல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். பொருள்களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு போதல் என்ற இந்தச் செயலைக் குழந்தைகள் மிகச் சரியாக சிறிய செயல்களாக அறிந்து கொள்கிறார்கள். இதைக் கவனிக்கும் குழந்தையும் அதே போல ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்து நாம் செய்ததை அப்படியே செய்து காட்டும் திறமை வந்துவிடும்.

மூன்று வயதிற்குள் குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமானதாக இருக்கும் எனவே அந்த வயதிற்குள் குழந்தைகளுக்கு நல்ல அனுபவங்களையும், நடத்தைகளையும் பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். இதுவே எதிர்காலத்தில் சமூகத்தில் அவர்களை மிகச்சிறந்த மனிதர்களாக உருவாக்கும் என்கின்றனர். குழந்தை நல நிபுணர்கள்.

English summary

Inside a Child’s Mind | குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!

Recent research shows the first three years of life are critical to your baby's brain development. During these years the brain builds the foundation for what comes later in life. child's brain is made up of different areas that control emotion, logic, language, memory, behavior, and motor skills. While genes provide the blueprint, interconnected circuits between different areas of the brain grow stronger or weaker depending on the experiences of your child.
Story first published: Thursday, March 1, 2012, 13:10 [IST]
Desktop Bottom Promotion