மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா?

இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்களும், விடை தெரியாத கேள்விகளும் நிறைந்துள்ளது. இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கே அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த காந்தி அகிம்சையை உலகிற்கே போதித்தார். இப்போதும் உலகின் பல நாடுகளில் அமைதியின் சின்னமாக மகாத்மா காந்தி போற்றப்படுகிறார்.

Why Mahatma Gandhi Never Received Nobel Peace Prize

உலக வரலாற்றில் அமைதிக்காக பலருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில், அகிம்சையை உலகிற்கே போதித்த மகாத்மா காந்திக்கு ஏன் ஒரு முறைகூட நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அத்தனைக்கும் மேலாக காந்தியின் பெயர் 5 முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை (1937, 1938, 1939, 1947 மற்றும் 1948-இல் அவர் படுகொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு) பரிந்துரைக்கப்பட்டார். அமைதி மற்றும் அகிம்சைக்கு அவர் மிகப்பெரிய பங்காற்றிய போதிலும், அவருக்கு அப்பரிசு ஒருபோதும் வழங்கப்படவில்லை. அதற்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொள்கை மாறுபாடு

மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு தவிர்க்கப்பட்டதற்கான காரணங்கள் சிக்கலானவை. நோபல் பரிசுக்குத் தகுதியானவர்களைத் தீர்மானிக்க நோபல் குழு பின்பற்றும் பாரம்பரிய வகைப்பாடுகளுக்குள் மகாத்மா காந்தி பொருந்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. அந்தக் குழுவின் பார்வையில், அவர் ஒரு அரசியல்வாதியோ அல்லது சர்வதேசச் சட்டத்தின் ஆதரவாளரோ அல்ல. அதேபோல, அவர் முதன்மையாக ஒரு மனிதாபிமானப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளை ஒருங்கிணைப்பவரோ கூட அல்ல.

அமைதி மற்றும் அகிம்சை குறித்த மகாத்மா காந்தியின் அணுகுமுறை தனித்துவமானதாக இருந்தது. இதனால், தங்கள் வழக்கமான மதிப்பீட்டு வரைமுறைக்குள் அவரது பங்களிப்புகளை மதிப்பிடுவது அக்குழுவிற்குச் சவாலாக இருந்திருக்கலாம்.

நோபல் பரிசை தீர்மானிக்கும் குழுவின் முடிவு

நோபல் பரிசு கமிட்டி குழுவில் இருந்த அவரது விமர்சகர்களில் சிலர், காந்தி எப்போதும் அமைதிவாதியாக இருக்கவில்லை என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது சில அகிம்சைப் போராட்டங்கள் வன்முறையா மாறியது என்றும் வாதிட்டனர். உதாரணமாக, 1920-21 காலகட்டத்தில் நடைபெற்ற முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது, ​​பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணங்களில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்ற இடத்தில், ஒரு கும்பல் பல காவலர்களைக் கொன்று காவல் நிலையத்திற்குத் தீ வைத்த சம்பவத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் காந்தியின் கொள்கைகள் உலகளாவியவை அல்ல, மாறாக அவை அடிப்படையில் இந்தியத்தன்மை கொண்டவை என்று சிலர் கருதினர். நோபல் குழுவின் ஆலோசகரான ஜேக்கப் எஸ். வார்ம்-முல்லர் இது குறித்துக் கூறும்போது, ​​"தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய புகழ்பெற்ற போராட்டம் இந்தியர்களுக்காக மட்டுமே இருந்ததே தவிர, அவர்களைவிடவும் மோசமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்த கறுப்பின மக்களுக்காக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது," என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பரிந்துரை

1937-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை Lord Cecil of Chelwood வென்றார். 1938 மற்றும் 1939-ஆம் ஆண்டுகளில் கோல்ப்ஜோர்ன்சென் (Colbjornsen) மூலம் மகாத்மா காந்தி மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார்; இருப்பினும், காந்தி மீண்டும் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் (short list) இடம்பெறப் பத்து ஆண்டுகள் கடக்க வேண்டியிருந்தது. 1947-இல், குழுவின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஆறு பெயர்களில் மோகன்தாஸ் காந்தியின் பெயரும் ஒன்றாக இருந்தது. இருப்பினும், அந்த காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிலவிய சூழலில், காந்திக்கு விருதை வழங்குவதில் குழுவின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் மிகுந்த தயக்கம் காட்டினர். 1947-ஆம் ஆண்டிற்கான விருது 'குவேக்கர்ஸ்' அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் படுகொலை

1948-ல் அந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரைகளை ஏற்கும் காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். குழுவிற்கு ஆறு பரிந்துரைக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன, அவற்றில் சிலவற்றை அனுப்பியவர்கள் முந்தைய விருது வென்றவர்கள் ஆவர். ஆனால், அதுவரை யாருக்கும் நோபல் அமைதிப் பரிசு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டதில்லை. அதேசமயம் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விருதுகளை மரணத்திற்குப் பின்னரும் வழங்க இடமிருந்தது.

அந்த காலகட்டத்தில் நார்வேஜியன் நோபல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ஆகஸ்ட் ஷூ (August Schou), விருது வழங்கும் ஸ்வீடிஷ் நிறுவனங்களிடம் இதுகுறித்த கருத்துகளைக் கேட்டார். நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறந்தால் மட்டுமே மரணத்திற்குப் பின் விருது வழங்கப்பட வேண்டும் என்று கருதியதால், அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், "தகுதியான உயிருடன் இருக்கும் வேட்பாளர் யாரும் இல்லை" என்று நார்வேஜியன் நோபல் குழு கருதியதால், அந்த ஆண்டில் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. விருது வென்றவர்களின் பட்டியலில் மகாத்மா காந்திக்குரிய இடமாகக் கருதப்பட்ட அந்த இடம், அமைதியாகவும் அதே சமயம் மரியாதையுடனும் காலியாக விடப்பட்டது.

Story first published: Saturday, October 3, 2026, 12:07 [IST]
Desktop Bottom Promotion