7000 பேரை ஒரே இரவில் கொன்ற பாகிஸ்தானின் மோசமான இராணுவ அதிகாரி யார் தெரியுமா? அவர் ஏன் அப்படி செய்தார் தெரியுமா

உலகம் தோன்றிய காலம் முதலே மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் சர்வாதிகாரிகள் இருந்து வந்துள்ளனர். சர்வாதிகாரிகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஹிட்லரும், முசோலினியும்தான். ஏனெனில் அவர்கள் அதிகாரத்திற்காக இரக்கமின்றி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர்.

ஆனால் வரலாற்றில் இவர்கள் மட்டுமின்றி பல ஆட்சியாளர்கள் தங்கள் கொடூர செயல்களால் உலகை நடுங்க வைத்தனர். செங்கிஸ் கான், ஹலாகு, தைமுர்லாங், இடி அமீன் போன்ற பலர் தங்களின் இராணுவ நடவடிக்கைகளால் பேரழிவுகளை ஏற்படுத்தினர். ஆனால் ஒரே இரவில் ஏழாயிரம் பேரைக் கொன்ற ஒரு கொடூர மனிதனைப் பற்றி பலரும் அறியாதது துரதிர்ஷ்டவசமானது. அவரது செயலால், அவர் 'வங்காளதேசத்தின் கசாப்புக்காரன் (Butcher of Bangladesh)' என்று அழைக்கப்பட்டார்.

Who is Tikka Khan The Butcher of Bangladesh

அந்த கொடூர மனிதரின் பெயர் 'டிக்கா கான்', அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஜெனரலாகவும் முதல் ராணுவத் தலைவராகவும் இருந்துள்ளார். டிக்கா கான் பிப்ரவரி 10, 1915 அன்று ராவல்பிண்டியில் பிறந்தார். டிக்கா கான் 1935 இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, டிக்கா கான் பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள ராணுவத்தில் மேஜரானார்.

1969 ஆம் ஆண்டு யஹ்யா கான் பாகிஸ்தானின் ஜனாதிபதியான பிறகு, டிக்கா கான் கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய வங்காளதேசத்திற்கு) அனுப்பப்பட்டார். டிக்கா கான் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் அங்கு நிலவி வந்த தனி நாடு கோரிக்கையையும், கிளர்ச்சியையும் அடக்குவதாகும். அவர் அங்கு சென்றவுடன், டிக்கா கான் தனது கடுமையான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார், அதற்கு 'ஆபரேஷன் சர்ச்லைட்' என்று பெயரிடப்பட்டது.

வரலாற்று குறிப்புகளின் படி, டிக்கா கான், இந்த கிளர்ச்சியை அடக்க கடுமையான இராணுவ வழிமுறைகளை பின்பற்றினார், கிளர்ச்சியை அடக்க அவர் டாக்காவில் ஒரே இரவில் 7000 பேரைக் கொன்றார். இதில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, டைம் பத்திரிகை டிக்கா கானை 'வங்காளதேசத்தின் கசாப்புக்காரன்(Butcher of Bangladesh)' என்று அழைத்தது.

Who is Tikka Khan The Butcher of Bangladesh

வங்கதேசத்தில் நடந்த இந்த இனப்படுகொலை குறித்து ராபர்ட் பெயின் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில், 1971 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் காட்டுமிராண்டித்தனம் உச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு, வெறும் 9 மாதங்களில் இரண்டு லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலை சம்பவம் தொடர்பாக அனைத்து குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்பட்ட நிலையிலும், உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் ராணுவத்தில் டிக்கா கானின் அந்தஸ்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. அவருக்கு பல பதவி உயர்வுகள் கிடைத்தன.

மார்ச் 1971 இல் அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் யஹ்யா கான் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டபோது, ​​கான் அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்தார். டாக்கா சம்பவத்திற்குப் பிறகு வங்காள பிரிவினைவாதிகளைப் பாதுகாக்க இந்தியா முன்வந்தது, இதைத்தொடர்ந்து டிசம்பர் 3, 1971 அன்று போர் வெடித்தது. 12 நாட்களுக்குப் பிறகு கிழக்கில் பாகிஸ்தான் சரணடைந்தது, கிழக்கு பாகிஸ்தானில் 1970 தேர்தல்களில் வெற்றி பெற்ற ரஹ்மான், சுதந்திர வங்காளதேசத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மேலும் அப்போதைய மேற்கு பாகிஸ்தானில் 1970 தேர்தல்களில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் சுல்பிகர் அலி பூட்டோ, டிக்கா கானை இராணுவத் தலைவராக நியமித்தார், பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்தார். பாகிஸ்தான் வரலாற்றின் மிக கொடூரமான இராணுவத் தலைவராக அறியப்பட்ட டிக்கா கான் மார்ச் 20, 2002 அன்று இறந்தார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, May 23, 2025, 12:13 [IST]
Desktop Bottom Promotion