இந்த முகலாய அரசரின் முட்டாள்த்தனம் முகலாய வம்சம் மட்டுமின்றி இந்தியாவையே அழிவு காலத்தை நோக்கி தள்ளியது...!

இந்திய வரலாற்றில் முகலாயர்களை புறக்கணிக்கவே இயலாது. இந்தியாவை வடிவமைத்ததிலும், பல அரிய பொக்கிஷங்களை உருவாக்கியதிலும் முகலாயர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்நிய படையெடுப்பாளர்களாக இந்தியாவிற்குள் நுழைந்த முகலாயர்கள் குறுகிய காலத்திலேயே தங்களுக்கென மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினர்.

இந்தியாவில் முகலாயர்களின் வம்சம் எவ்வளவு விரைவாக எழுச்சி அடைந்ததோ அவ்வளவு விரைவாக வீழ்ச்சியடையவும் செய்தது. அதற்கு காரணம் அக்பர், ஷாஜகான் போன்ற திறமையான ஆட்சியாளர்கள் பின்னாளில் உருவாகாதுதான்.

Which Mughal King s Decision Destroyed India

பாபரில் தொடங்கி ஒளரங்கசீப் வரை முகலாயப் பேரரசு வேகமாக விரிவடைந்தது. அவர்கள் இந்தியாவில் பல சுவாரஸ்யமான மற்றும் அற்புதமான கட்டுமானங்களை உருவாக்கினர், அதற்காக உலகளவில் அங்கீகாரம் பெற்றனர். இதனால் அவர்களின் கருவூலம் விரைவான வளர்ச்சியைக் கண்டது. இன்றும் அவர்கள் புகழ் நிலைபெற்றிருக்க இந்த கட்டுமானங்களே காரணம்.

இருப்பினும், ஔரங்கசீப்பிற்குப் பின் வந்த தலைமுறைகள் முகலாயப் பேரரசை நிர்வகிக்கவும் விரிவுபடுத்தவும் தவறியது மற்றும் அதன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. முகலாய பேரரசை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் முட்டாள்தனமான மற்றும் தவறான முடிவுகளை அவர்கள் எடுத்தனர்.

இந்தியாவை அழிவை நோக்கி அழைத்துச் சென்ற ஒளரங்கசீப்பின் பேரனான ஃபரூக்சியரின் முடிவு இதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர், ஜஹந்தர் ஷாவைக் கொன்று முகலாய சுல்தானகத்தின் அரியணை ஏறியவர். 1713 முதல் 1719 வரை ஆட்சி செய்த ஃபரூக்சியார் பெயருக்கு ஒரு பேரரசராக இருந்தார். உண்மையில், முகலாயப் பேரரசின் அதிகாரம் சயீத் சகோதரர்களின் கைகளில் இருந்தது.

சயீத் சகோதரர்கள் 1707 இல் ஒளரங்கசீப்பின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இரு சகோதரர்களான சையத் ஹசன் அலி கான் மற்றும் சையத் ஹுசைன் அலி கான் ஆகியோர் ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டனர். ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, சகோதரர்கள் முகலாய அரசவையில் தங்களுடைய செல்வாக்கை உயர்த்திக் கொண்டு, அரசருக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினார்கள், அதன்பின் அவர்கள் விரும்பியவர்களை முகலாயப் பேரரசர் ஆக்கினார்கள்.

1717 ஆம் ஆண்டில், முகலாய பேரரசர் ஃபரூக்சியார் இந்தியாவில் வர்த்தகம் செய்ய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கினார். எந்த வரியும் இல்லாமல் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கினார். இந்த ஆணை கிழக்கிந்திய நிறுவனத்தை வங்காளம், ஒடிசா மற்றும் பீகாரில் வரியின்றி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த அனுமதித்தது. அதற்கு ஈடாக அந்த நிறுவனம் முகலாயப் பேரரசருக்கு ஆண்டுதோறும் 3,000 ரூபாய் கொடுத்தது. இந்த முட்டாள்தனமான முடிவுதான் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்ற முக்கிய காரணமாக மாறியது.

ஃபரூக்சியாருக்கும் சயீத் சகோதரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்த காலமும் இருந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. ஒருவரையொருவர் தோற்கடிக்க சதி செய்ய ஆரம்பித்தனர். 1719 இல், அஜித் சிங் சயீத் சகோதரர்கள் மூலம் லால் கிலாவை (செங்கோட்டை) தாக்கினார். சக்கரவர்த்தி தனது தாய், மனைவி மற்றும் மகள்களுடன் ஒளிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சயீத் சகோதரர்கள் செய்த துரோகத்தால், ஃபாருக்சியார் கண்டுபிடிக்கப்பட்டு பார்வை பறிக்கப்பட்டார்.

இருவருக்குமிடையே நடந்த போரின் முழுமையான நேரடி பலன்களை கிழக்கிந்திய கம்பெனி அடைந்தது. முகலாயர்களின் வீழ்ச்சியை பயன்படுத்தி படிப்படியாக இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றத் தொடங்கியது. இந்தியாவின் மீதான அவர்களின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் நீடித்தது என்பதை நாமே நன்கு அறிவோம்.

Story first published: Tuesday, March 5, 2024, 15:39 [IST]
Desktop Bottom Promotion