கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?

சிக்கன், மட்டன் மற்றும் முட்டை போன்ற உணவுகளுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவென்றால் அது காளான்தான். ஏனெனில் சிக்கன், மட்டன் போலவே காளானையும் பல வழிகளில் சுவையாக சமைக்கலாம். பொதுவாக நாம் மஷ்ரூமை நாம் 50 முதல் 100 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனால், உலகில் உள்ள சில அரிய வகை காளான்களின் விலை நமக்கு மயக்கத்தையே வர வைக்கும்.

Most Expensive Mushrooms in the World

உலகப் பணக்காரர்கள் கூட அவற்றை வாங்குவதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்கள். விற்பனையாளர்கள் இவற்றிற்கு ஒரு கிலோவிற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை விலையாக நிர்ணயிக்கிறார்கள். சில சமயங்களில், இந்த காளானை ஏலம் விடும்போது லட்சக்கணக்கான டாலர்களுக்குக் கூட விற்கப்படுகிறது. ஏன் இந்த காளானுக்கு இவ்வளவு அதிக விலை? இதில் அப்படி என்ன ஸ்பெஷலாக உள்ளது? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடிகளில் விற்கப்படும் வெள்ளை ட்ரஃபிள் மஷ்ரூம்

வெள்ளை ட்ரஃபிள் உலகின் மிகவும் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாகும். விவசாயிகள் இந்தக் காளானை இத்தாலி மற்றும் குரோஷியா பகுதிகளில் வளர்க்கின்றனர். அதன் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை விரும்புகிறார்கள். நாம் சாப்பிடும் மற்ற காளான்களைப் போலல்லாமல், இந்தக் காளான்கள் மண்ணுக்கு அடியில் மரத்தின் வேர்களுக்கு அருகில் வளர்கின்றன. அவை ஓக் மற்றும் பீச் மரங்களுடன் சேர்ந்து வளர்கின்றன. இந்த காளான்களைக் கண்டறிய விவசாயிகள் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நாய்களைப் பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் இவற்றைப் பயிரிடுவது மிகவும் கடினமாக உள்ளது. இதனால்தான் இதன் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. கின்னஸ் உலக சாதனைகளின்படி, டிசம்பர் 2007-ல் மக்காவ்வில் நடந்த ஒரு ஏலத்தில், ஒரு செல்வந்தர் 1.3 கிலோ எடையுள்ள ஒரு பெரிய வெள்ளை ட்ரஃபிளை 3.3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினர். இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 3 கோடிக்கும் மேலாகும்.

யார்ட்சா குன்பு

யார்ட்சா குன்பு உலகின் மிக விலையுயர்ந்த காளான்களில் ஒன்றாகும். இதனை 'கேட்டர்பில்லர் ஃபங்கஸ்' என்றும் அழைக்கிறார்கள். இது இமயமலைப் பகுதிகளில், குறிப்பாக திபெத்திய பீடபூமியைச் சுற்றியுள்ள இடங்களில் காணப்படுகிறது. சாதாரண காளான்களைப் போல இது தரையில் வளர்வதில்லை; மாறாக, கம்பளிப்பூச்சிகளின் மீது ஒட்டிக்கொண்டு, அவற்றின் உடலிலேயே வளரும் ஒரு ஒட்டுண்ணி பூஞ்சையாகும்.

இதைச் சேகரிப்பது மிகவும் கடினமான காரியமாகும், ஏனெனில் இது மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. ஆசியச் சந்தைகளில் இதன் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், இதன் விலை மிக அதிகமாக உள்ளது. கின்னஸ் உலக சாதனைகளின்படி, 2023-ஆம் ஆண்டில் இதன் விலை ஒரு பவுண்டிற்கு 63,000 அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் 59 லட்சம்) எட்டியது. அதாவது, சுமார் 450 கிராம் எடை கொண்ட இந்த காளானுக்காக இவ்வளவு பெரிய தொகை செலுத்தப்பட்டது. மேலும் காளானின் தரம், அதன் இருப்பு மற்றும் கிடைக்கும் பிராந்தியம் ஆகியவற்றைப் பொறுத்து விலை மாறுபடும். பாரம்பரிய சீன மருத்துவத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பானின் மட்சுடேக் காளான்கள்

ஜப்பானில் மட்சுடேக் காளான்கள் உலகளவில் காளான் சந்தையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் பைன் மரங்களின் வேர்களுக்கு அருகில் வளர்கின்றன. இவை பைன் மரங்களுடன் ஒத்துப்போகும் ஒரு தனித்துவமான, வலுவான நறுமணத்தையும், இறைச்சி போன்ற அடர்த்தியான அமைப்பையும் கொண்டுள்ளன. இது பொதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. காலநிலை மாற்றங்கள், காடுகள் அழிப்பு மற்றும் இவற்றை வளர்ப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, இவை மிகவும் அரிதானவையாகிவிட்டன. ஜப்பானில் உயர்தர மட்சுடேக் காளான்களின் விலை, சில சமயங்களில் ஒரு கிலோவிற்கு 1.5 லட்சம் யென் வரை செல்கிறது.

கருப்பு ட்ரஃபிள் மஷ்ரூம்

கருப்பு ட்ரஃபிள் உலகின் மிக விலையுயர்ந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும். பிரான்சின் பெரிகோர்ட் பகுதியைச் சேர்ந்த ட்ரஃபிள்கள் மிகவும் பிரபலமானவை. சமையல் கலைஞர்கள் இவற்றை பாஸ்தா, ரிசோட்டோ, சாஸ்கள் மற்றும் பிற சிறப்பு உணவுகளில் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனித்துவமான காலநிலை, மிகக் குறுகிய அறுவடைக்காலம் மற்றும் கடினமான அறுவடை முறை ஆகியவை சர்வதேச சந்தையில் இவற்றிற்கான பெரும் தேவையை உருவாக்கியுள்ளன.

Story first published: Tuesday, October 27, 2026, 15:49 [IST]
Desktop Bottom Promotion